LATEST NEWS
“எங்களைக் காப்பாத்துங்க.. இந்தக் கட்டிடம் விழப்போகுது…” மரணத்தின் விளிம்பில் மாணவிகள் எடுத்த கடைசி வீடியோ..! அடுத்த நொடியே நடந்த பயங்கரம்..!!!
டெல்லி சத்திய நிகேதன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்த கட்டிடத்திற்கு அடுத்த கட்டிடத்தில் அர்னிகா மற்றும் மானசி ஆகிய இருவரும் வசித்து வந்தனர். ஏழு பேரின் உயிரைப் பறித்த அந்த ‘ஹாஸ்டல் டேஸ்’ பிஜி கட்டிடம் இடிந்து தரைமட்டமாவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, டெல்லி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவியரான இவ்விருவரும் தங்கள் அறையின் கூரை மற்றும் சுவர்களில் விழுந்திருந்த ஆழமான விரிசல்களை வீடியோவாகப் பதிவு செய்தனர். விரிசல்கள் வழியாகச் சிமெண்ட்டும் தண்ணீரும் கசியத் தொடங்கி, அவை பெரிதாகிக் கொண்டே இருந்ததைக் கண்ட அவர்கள், “இந்தக் கட்டிடம் விழப் போகிறது என்று தோன்றுகிறது” எனக் கூறியுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில், அந்தப் பிஜி கட்டிடம் இடிபாடுகளாக மாறி, மாணவர்களையும் தொழிலாளர்களையும் அடியோடு புதைத்தது.
‘கனக் லதா’ பிஜி கட்டிடத்தில் வசித்த அர்னிகா மற்றும் மானசி, தங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை பகிர்ந்து கொண்டனர். “திடீரென எங்கள் அறைக்கு அடுத்துள்ள சுவர் இடிந்து விழுந்தது, அதைத் தொடர்ந்து முழு கட்டிடமும் சரிந்தது. ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது போல இருந்தது. எங்கள் கட்டிடமும் இடிந்து விழுந்துவிடுமோ என்று பயந்து, மற்ற மாணவிகளையும் தப்பி ஓடுமாறு கத்திக்கொண்டே நாங்கள் உயிருக்குப் பயந்து வெளியே ஓடினோம்” என்று அவர்கள் கூறினர். இந்த பதற்றத்தில் மானசி தனது செல்போன் மற்றும் பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு வந்துள்ளார். கட்டில் அருகே செங்கற்கள் விழுந்ததாகவும், அந்த நேரத்தில் கட்டிலில் இருந்திருந்தால் தன் மீது விழுந்திருக்கும் என்றும், அதிர்ஷ்டவசமாகத் தான் தப்பியதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
இடிபாடுகளால் அடைக்கப்பட்டிருந்த வெளிக்கதவை மாணவர்கள் அனைவரும் சேர்ந்து தள்ளித் திறந்து வெளியேறியுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவர்களின் அலறல் சத்தமும், ” எங்களைக் காப்பாற்றுங்கள்” என்ற கதறலும் இன்னும் தங்கள் காதுகளில் கேட்டுக்கொண்டே இருப்பதாகத் அதிர்ச்சியிலிருந்து மீளாத அந்த மாணவிகள் தெரிவித்தனர். “தெற்கு டெல்லி ஒரு நல்ல மற்றும் பாதுகாப்பான பகுதியாக இருக்கும் என்று நினைத்து பெரிய கனவுகளுடன் டெல்லி வந்தோம், ஆனால் அதற்குப் பதிலாக ஒரு நகர்ப்புற சேரியில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்” என்று அர்னிகா வேதனையுடன் கூறினார். தற்போது இவர்களின் பிஜி கட்டிடமும் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டு, புதன்கிழமை அன்று டெல்லி மாநகராட்சியால் இடிக்கப்பட உள்ளது.
