இளையராஜாவுக்கு சிவில் சிறையா..? சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்… டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘சரிகம’ நிறுவனம் மனுத்தாக்கல்..!! – cinefeeds
Connect with us

CINEMA

இளையராஜாவுக்கு சிவில் சிறையா..? சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்… டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘சரிகம’ நிறுவனம் மனுத்தாக்கல்..!!

Published

on

இசைஞானி இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி, ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றம் விதித்த பதிப்புரிமை இடைக்காலத் தடையை மீறி, இளையராஜா பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் கூறி இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், விதிமீறலில் ஈடுபட்டதற்காக இளையராஜாவை சிவில் சிறையில் அடைக்கவும், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யவும் சரிகம நிறுவனம் கோரியுள்ளது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையை சரிகம நிறுவனத்திடம் ஒப்படைக்க அதிகாரி ஒருவரை நியமிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு உரிமை கொண்டாடவோ, அவற்றைப் பயன்படுத்தவோ அல்லது பிறருக்கு உரிமம் வழங்கவோ கூடாது என பிப்ரவரி 13 அன்று டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த இடைக்கால உத்தரவை ரத்து செய்யக்கோரி இளையராஜா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து, ஜூலை 1 அன்றும் அந்த உத்தரவை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. திரைப்படத் தயாரிப்பாளர்களிடமிருந்து அந்தப் பாடல்களின் முறையான பதிப்புரிமையைப் பெற்றுள்ளதாக ‘சரிகம’ தரப்பில் வாதிடப்பட்டது.

Advertisement

இந்தத் தடையையும் மீறி, அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ், ஜியோசாவன் மற்றும் ஸ்பாட்டிஃபை, யூடியூப் போன்ற தளங்களில் இளையராஜா தரப்பு பட்டியல்களின் கீழ் அந்தப் பாடல்கள் தொடர்ந்து கிடைக்கப் பெற்று வருகின்றன என்று சரிகம குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் சரிகம நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், சரிகம நிறுவனத்தின் புகாருக்கு பதிலளிக்குமாறு இளையராஜாவிற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in