LATEST NEWS
யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி..! சிறுமியை விழுங்கியதா வளர்ப்பு மலைப்பாம்பு…? வைரல் வீடியோவின் பின்னணியில் உள்ள பகீர் உண்மை..!!
சமீபத்தில் சமூக வலைதளங்களில் பெற்றோரைக் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. வியட்நாமில் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட ஒரு பெரிய மலைப்பாம்பு, விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை உயிரோடு விழுங்கிவிட்டதாகக் கூறி ஒரு வீடியோவும், வயிறு உப்பிய நிலையில் இருக்கும் ஒரு மலைப்பாம்பின் புகைப்படமும் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். ஆனால், உண்மையில் இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்ததா என்று ஆய்வு செய்தபோது, இதன் பின்னணியில் உள்ள உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த வைரல் தகவலில் மிகப்பெரிய பொய்யே அதன் இடம் தான். இந்த வீடியோவிற்கும் வியட்நாமிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை; இது உண்மையில் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சுபாங் பகுதியைச் சேர்ந்ததாகும். ஆகஸ்ட் 22 அன்று ‘அப்துல் அஜீஸ் அக்பர்’ என்பவரால் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவில் உள்ள சிறுமியும் மலைப்பாம்பும் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர். அந்த சிறுமி தனது வீட்டில் உள்ள வளர்ப்பு மலைப்பாம்புடன் விளையாடும் பல வீடியோக்கள் அந்த கணக்கில் உள்ளது, இதன் மூலம் சிறுமிக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை என்பது தெளிவாகிறது.
அப்படியானால் வயிறு உப்பிய மலைப்பாம்பின் புகைப்படம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுகிறது. உண்மையில், மலைப்பாம்பின் வயிறு வீங்கியிருப்பது போல் காட்டப்படும் அந்தப் படம் முற்றிலும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். திறந்தநிலை AI கண்டறிதல் கருவிகள் மூலம் சோதித்தபோது, அதில் SynthID வாட்டர்மாரக் இருப்பது தெரியவந்தது. குறும்புக்காரர்கள் சிலர் இந்தோனேசியாவில் எடுக்கப்பட்ட ஒரு பழைய சாதாரண வீடியோவுடன், AI மூலம் உருவாக்கப்பட்ட போலி புகைப்படத்தைச் சேர்த்து, ஒரு தவறான மற்றும் திகிலூட்டும் கதையை உருவாக்கியுள்ளனர். எனவே, மலைப்பாம்பு சிறுமியை விழுங்கியதாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது மற்றும் தவறாக வழிநடத்தக்கூடியது.
