CRIME
“இனிமேல் இப்படி நடந்தா அவ்ளோதான்.. துப்பாக்கிச் சூட்டில் பலியான பிரபல இன்ஃப்ளூயன்ஸர்… துணிச்சலாக பொறுப்பேற்ற கேங்ஸ்டர்…” நடுங்க வைக்கும் சோஷியல் மீடியா போஸ்ட்..!!
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் பிரபல சமூக வலைதள பிரபலம் மற்றும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டான ‘மேட் சிந்து’ (இயற்பெயர் மதுசூதன்) சனிக்கிழமை மாலை லோஹாரகா சாலையில் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் சிரிவெனெலா கூறுகையில், தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
இந்தக் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, வெளிநாட்டில் இருக்கும் கேங்ஸ்டர் கோல்டி தில்லான் பெயரில் இயங்கும் சமூக வலைதள கணக்கில் இருந்து ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், கோல்டி தில்லான் மற்றும் ஜக்கா தர்ன் தாரன் ஆகிய இருவரும் இந்த கொலையின் பொறுப்பை ஏற்பதாகக் கூறப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், இதுபோன்ற நபர்கள் புதிய தலைமுறையை சீரழிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன், டிக்டாக்கில் இவர்களை ஊக்குவிப்பவர்களுக்கும், இதுபோன்றவர்களை முதன்மை விருந்தினராக அழைக்கும் பள்ளிகளுக்கும் கடைசி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாபில் ரவுடிசம் செய்ய நினைப்பவர்கள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும், “இது வீரர்களின் பூமி, இங்கு வீரர்கள் மட்டுமே இருப்பார்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த சமூக வலைதளப் பதிவில், இதுவரை அழைப்புகள் வராத நபர்கள் தங்களது பாதுகாப்பை ஏற்பாடு செய்து தயாராக இருக்குமாறு “காத்திருந்து பாருங்கள்” என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இப்பதவின் இறுதியில் #RanaDhillon, #RockyPortugal, #SukhaSandhu மற்றும் #Hood420Canada போன்ற ஹாஷ்டேகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த சமூக வலைதளப் பதிவு உண்மையில் கோல்டி தில்லானால் பதிவிடப்பட்டதா அல்லது அவரது கூட்டாளிகளால் வெளியிடப்பட்டதா என்பது குறித்து காவல்துறையும் புலனாய்வு அமைப்புகளும் அதன் உண்மைத்தன்மையை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன.
