LATEST NEWS
“3 நாட்களாக எங்கே போனார் விஜய்..? திரிஷா தான் துணை முதல்வர்” ஆர்.பி.உதயகுமார் வீசிய புது வெடிகுண்டு.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
சிவகங்கையில் நடைபெற்ற அம்மா பேரவை கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக அரசையும் முதலமைச்சர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். “முதலமைச்சர் விஜய் தனது நண்பர்களுக்கு மட்டுமே அரசுப் பதவிகளை வழங்கி வருகிறார்; நாளை நடிகை திரிஷாவுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று சாடினார். மேலும், மேகதாது, காவிரி மற்றும் தமிழ்நாட்டின் வறட்சி போன்ற வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினால் வாய் திறக்க மறுக்கும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் பாப்கான் சாப்பிட மட்டும் வாய் திறக்கிறார் என்றும், அத்திரைப்படம் தோல்வியடைந்த விரக்தியில் முதலமைச்சர் மூன்று நாட்களாக தலைமைச் செயலகத்திற்கு வரவில்லை என்றும் எள்ளிநகையாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் உண்மை, உழைப்பு மற்றும் கருணை மட்டுமே இருப்பதாகத் தெரிவித்தார். விஜய் போல வெறும் வசீகரமான தோற்றமும் பஞ்ச் டயலாக்குகளும் பேசி இளைஞர்களின் வாழ்க்கையை பஞ்சராக்க அவருக்குத் தெரியாது என்றும், மக்களுக்குச் சேவை செய்யத் தெரிந்த பழனிசாமிக்கு நடிக்கத் தெரியாது என்றும் கூறினார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விஜய்யைக் காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமி தான் எனக் குறிப்பிட்ட அவர், அதை மறந்துவிட்டு மனிதாபிமானமின்றி விஜய் விமர்சித்து வருவதாகக் சாடினார். மேலும், அமைச்சர் பதவி ஆசையில் அதிமுகவிலிருந்து விலகி பிற கட்சிகளுக்குச் சென்றவர்களுக்கு அங்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
