LATEST NEWS
“இபிஎஸ் கால்களை தேடி வந்த விஜய்…” தவெக-வை சீண்டிய அதிமுக.. முற்றிய ஐடி விங் போரால் பரபரக்கும் தமிழக அரசியல்..!!
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தவெக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப அணியினர் இடையே ஏற்பட்டுள்ள கடுமையான சமூக ஊடக மோதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் லண்டன் பயணத்தை விமர்சித்ததோடு, குடும்ப உறவு என்பது தாய், தந்தை, மனைவி மற்றும் பிள்ளைகளோடு வாழ்வதுதான் என அவரது தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிவைத்துத் தாக்கினார். இதற்குத் தவெக ஐடி விங் தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி நாகரிக எல்லையைத் தாண்டிப் பேசுவதாகவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தை அறிவாலயத்தில் அடகு வைத்துவிட்டு திமுகவின் முழு அடிமையாக அவர் மாறிவிட்டார் என்றும் தவெகவினர் கடுமையாகச் சாடினர்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து அதிமுக ஐடி விங் வெளியிட்ட பதிவில், ஒருவரை குடும்பத்தோடு நல்லமுறையில் வாழச் சொல்வது எப்படி வரம்பு மீறலாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், பெற்ற தாய், தந்தை மீதே வழக்குத் தொடர்ந்த தவெக தலைவருக்குக் குடும்ப பாசம் என்பது கெட்ட வார்த்தையாகத்தான் தெரியும் என்றும், தனது திரைப்படங்கள் வெளியாவதற்காக ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் கால்களைத் தேடி ஓடியவர்தான் விஜய் என்றும் கடந்த கால வரலாற்றைச் சுட்டிக்காட்டி வசைபாடியுள்ளனர். இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், இரு கட்சிகளும் தனிப்பட்ட முறையில் மாற்றி மாற்றி அநாகரிக வார்த்தைகளால் மோதிக் கொள்வது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
