CRIME
“அடச்சீ நீங்கெல்லாம் மனுஷங்களா..?” குழந்தை பிறக்கக் கூடாது என சூனியச் சடங்கு.. பெட்ரோல் ஊற்றி மருமகளுக்கு தீ வைத்த மாமியார் குடும்பம்… குலை நடுங்கும் கொடூரம்..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீர் கொர்வா கிராமத்தில், கணவர் மற்றும் மாமியார் வீட்டின் கொடூர வரதட்சணைக் கொடுமை மற்றும் மூடநம்பிக்கை சித்திரவதைகளால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட ஹீனா பெஹ்ல் என்ற 40 வயது பெண், ஜோத்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு பகவானாராம் என்பவருடன் திருமணமான ஹீனாவுக்கு, ஆரம்பத்தில் நன்றாக இருந்த மாமியார் வீட்டார், நாளடைவில் சொத்தைக் கைப்பற்றவும் கார் வாங்கவும் வரதட்சணை கேட்டுத் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர். மேலும், ஹீனாவுக்குக் குழந்தை பிறக்காமல் தடுப்பதற்காக அவருக்குத் தெரியாமல் சில மருந்துகளைக் கொடுத்ததோடு, உள்ளூர் வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் சென்று சூனியச் சடங்குகள் மற்றும் மூடநம்பிக்கைப் பயிற்சிகளுக்கு ஆட்படுத்தி உடலளவிலும் மனதளவிலும் பெரும் கொடுமைகளை இழைத்துள்ளனர்.
இதன் உச்சகட்டமாக கடந்த செப்டம்பர் 21 அன்று, ஹீனா மீது கொடூரமாகப் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளனர். உடலின் 90 சதவீதத் தீக்காயங்களுடன் ஜெய்சல்மீர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜோத்பூர் மகாத்மா காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை புர்காராம் அளித்த புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட போலீசார், கணவன் பகவானாராம், மாமனார் சோனாராம், மாமியார் லஸ்மோ தேவி மற்றும் நாத்தனார் அம்ரிதா தேவி ஆகிய 4 பேரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்தைச் சோதனையிட்ட போலீசார், இந்த வரதட்சணைக் கொலை குறித்து அனைத்துக் கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
