CINEMA
பணம், புகழ் இருந்தும் என்ன பயன்…175 படங்கள்.. 8 மொழிகளில் புலமை…கலைக்காக வாழ்ந்த மனிதனை ஒரு பிணமாகக்கூட மதிக்காத சமூகம்… சத்யேந்திராவின் இறுதிப் பயணத்தில் நேர்ந்த அவலம்!
“வாழ்நாளில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும், நண்பர்களும் நம்மைச் சுற்றி இருந்தாலும், இறுதியில் மனிதன் தனியாகத்தான் போகிறான்” என்பதற்கு சாட்சியாக மாறியிருக்கிறார் பன்மொழி அறிஞரும், நடிகருமான சத்யேந்திரா. சினிமா கனவுகளோடு 45 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்தவர், வாழும்போதும் நிம்மதியின்றி வாழ்ந்து, சாகும்போதும் யாருமற்ற சடலமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பிணவறையில் அநாதையாகக் கிடக்கும் அவலம் நேர்ந்துள்ளது. கன்னடம், தமிழ், இந்தி, ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பானிய மொழி எனப் பல மொழிகளில் புலமை பெற்ற இவர், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் உட்பட 175 திரைப்படங்கள், ஒரு ஹாலிவுட் படம் மற்றும் ஒரு ஜெர்மன் மொழிப் படம் எனத் தன் நடிப்புப் பசியைத் தீர்த்துக்கொண்ட ஒரு சிறந்த கலைஞர் ஆவார்.
நடிகராகப் பரவலாக அறியப்படாத காலத்தைக் கடந்து, சமீபகாலமாக யூடியூப் போன்ற டிஜிட்டல் தளங்களில் ‘லியோ’ உள்ளிட்ட வணிகப் படங்களுக்கு இவர் வழங்கிய துணிச்சலான, நேர்மையான விமர்சனங்கள் இவரைப் பட்டிதொட்டியெங்கும் வைரலாக்கியது. எடிட்டர் லெனின் இயக்கிய ‘Knock Out’ என்ற குறும்படத்தில், சத்யேந்திரா ஒரு இறந்த மனிதனாகவே வாழ்ந்து காட்டிப் பல அங்கீகாரங்களைப் பெற்றார்; ஆனால், நிஜ வாழ்க்கையிலும் அதே மரணம் இவரை இப்படி அநாதையாக அலைக்கழிக்கும் என்று அவரே நினைத்திருக்க மாட்டார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
அவரது மறைவுச் செய்தி சோஷியல் மீடியா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அதைவிடக் கொடூரமான ஒரு சூழல் தற்போது நிலவுகிறது. கடந்த சில வருடங்களாகக் குடும்பத்தினரை விட்டு முற்றிலும் தனிமையான வாழ்க்கையையே வாழ்ந்து வந்த சத்யேந்திராவின் உடலைப் பெற்றுக்கொள்ள தற்போது ரத்த உறவினர்கள் யாரும் இல்லை. பெங்களூருவில் உள்ள அவரது உறவினர்களைத் தொடர்புகொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. சட்ட நடைமுறைகளின்படி, ரத்த உறவினர்கள் நேரில் வராமல் உடலை ஒப்படைக்க முடியாது என மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டதால், அந்தப் பன்மொழி மேதையின் உடல் Freezer Box-க்குள் முடங்கிக் கிடக்கிறது.”45 வருடங்கள் தமிழ் சினிமாவைக் காதலித்த ஒரு கலைஞனுக்கு இந்த நிலையா?”
45 வருடங்கள் தமிழ் சினிமாவைக் காதலித்த ஒரு கலைஞனுக்கு நேர்ந்துள்ள இந்த அவல நிலையைக் கண்டு நெட்டிசன்கள் கதறி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் திரைப்பட தொழிலாளர் அமைப்புகள் தலையிட ஆலோசித்து வருகின்றன. உறவினர்கள் யாரும் வராத பட்சத்தில், சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் திரையுலக அமைப்புகளே சத்யேந்திராவின் இறுதிச் சடங்குகளை முன்னின்று நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக சினிமா பேசிய ஒரு மேதைக்கு, இறுதிப் பயணத்தில் துணையாக ஒரு சொந்தம் கூட இல்லை என்பது காலத்தின் கொடூர முரண்!
