CINEMA
த்ரிஷ்யம் பட பாணி கொடூரம்..! “அவர் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்” என 2 ஆண்டுகள் நாடகம்… கணவனுக்கு சயனைடு கொடுத்து 12 அடி ஆழத்தில் புதைத்த கள்ளக்காதல் ஜோடி..!!
குஜராத் மாநிலம் ஜாம்நகரில், ‘த்ரிஷ்யம்’ பட பாணியில் கணவரைக் கொலை செய்து, அவர் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக இரண்டு ஆண்டுகளாக நாடகமாடிய மனைவியின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜிக்னேஷ் மாவடியா என்ற அந்த நபர், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் தங்கி வேலை செய்வதாக அவருடைய குடும்பத்தினர் நம்பி வந்துள்ளனர். ஆனால், அவர் தனது மனைவியான பிரித்வி மற்றும் அவரது கள்ளக்காதலன் நிலேஷ் ஆகியோரால் சயனைடு விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.
திருமணத்திற்கு முன்பிருந்தே கள்ளத்தொடர்பில் இருந்த பிரித்வியும் நிலேஷும், ஜிக்னேஷின் மதுபானத்தில் சயனைடு விஷத்தைக் கலந்து கொடுத்துக் கொன்றுள்ளனர். பின்னர், அவரது உடலை தாரேத் ஜி.ஐ.டி.சி பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைக்குக் கொண்டு சென்று, அங்கு சுமார் 12 அடி ஆழப் பள்ளம் தோண்டி தரைக்கு அடியில் புதைத்து மறைத்துள்ளனர். அதன் பிறகு, ஜிக்னேஷ் வேலைக்காக ஆஸ்திரேலியா சென்றுவிட்டதாகக் குடும்பத்தினரை நம்ப வைத்து, இரண்டு ஆண்டுகளாக இந்த கொடூரக் கொலையை அவர்கள் மறைத்து வந்துள்ளனர்.
ஆஸ்திரேலியா சென்ற ஜிக்னேஷின் சகோதரர் அசோக், அங்கு அவரைத் தேடியும் எந்தத் தடயமும் கிடைக்காததால் சந்தேகமடைந்து போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பிரித்வி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, தொழிற்சாலை தரையைத் தோண்டி ஜிக்னேஷின் எலும்புக்கூட்டை போலீசார் மீட்டனர். அந்த மனித எச்சங்கள் டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
