LATEST NEWS
“கையில் ரத்தம் சொட்டும் கத்தியுடன் சுற்றிய வாலிபர்” பெற்ற தாயைக் கொன்றும் அடங்காத வெறி..? – தன்னிடம் அன்பாகப் பழகி சாப்பாடு போட்ட பெண் உறவினரையும் தீர்த்துக்கட்டிய கொடூரன்.. பதறவைக்கும் பின்னணி..!!
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே, ஏற்கனவே தனது தாயைக் கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த 24 வயது இளைஞர், தற்போது தன்னிடம் அன்பாகப் பழகிய 56 வயது பெண் உறவினரைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதக்குழி பகுதியைச் சேர்ந்த சிஜூ என்ற அந்த இளைஞர், கடந்த 2021-ஆம் ஆண்டு தனது சொந்தத் தாயைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவராகக் கருதப்படும் அவர், நேற்று முன்தினம் கையில் ரத்தம் சொட்டும் கத்தியுடன் தெருவில் சுற்றித் திரிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாகக் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிஜூவை மடக்கிப் பிடித்து, அவரிடம் இருந்த கத்தியைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அவர் எந்த பதிலும் கூறாததால், அவரைப் பக்குவமாக வீட்டிற்கு அழைத்துச் சென்று அருகில் உள்ள வீட்டைப் பார்வையிட்டபோது, அங்கு லீலா என்ற 56 வயது பெண் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு போலீசார் உறைந்து போயினர். லீலாவின் உடலில் பல கத்திக்குத்து காயங்கள் இருந்ததோடு, அவரது உடலின் அருகே பெரிய கல் ஒன்றும் கிடந்துள்ளது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சிஜூவின் தாய் இல்லாததால் லீலா அவர் மீது மிகுந்த அக்கறையுடன் பழகி வந்துள்ளார் என்பதும், சிஜூ அடிக்கடி லீலாவின் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டு வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில், லீலாவின் வீட்டிற்குச் சென்ற சிஜூ, அவரை கத்தியால் குத்தியும், கல்லால் தாக்கியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இதையடுத்து லீலாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, குற்றவாளியான சிஜூவை மீண்டும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
