LATEST NEWS
“அத்தை VS மருமகன்” அறிவாலயத்தில் வெடித்த அதிகாரப் போட்டி… 30 மாவட்டப் பதவிகளைக் கேட்ட உதயநிதி.. முட்டுக்கட்டை போட்ட கனிமொழி… முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு என்ன..?
திமுகவின் அடுத்தகட்ட தலைமை மற்றும் அதிகார மையத்தைக் கைப்பற்றுவதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இடையே உள்கட்சிப் போட்டி நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியில் தனது பிடியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தனக்கு ஆதரவான சுமார் 30 இளம் நிர்வாகிகளுக்கு மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர் பதவிகளை வழங்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஒரு பட்டியலை அளித்துக் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சியின் அடிமட்ட உள்கட்டமைப்பைத் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உதயநிதி தரப்பு தீவிரமாக முயன்று வருகிறது.
இருப்பினும், உதயநிதியின் இந்த அதிரடி நகர்வுக்கும் தன்னிச்சையான பதவி நியமனங்களுக்கும் கனிமொழி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கட்சிப் பொறுப்புகள் மற்றும் முக்கியப் பதவிகள் அனைத்தும் முறையான உள்கட்சித் தேர்தல் மூலமாக, ஜனநாயக அடிப்படையில் தகுதியான மூத்த நிர்வாகிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே கனிமொழியின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த கனிமொழி, கட்சியின் கட்டமைப்பு மற்றும் புதிய பதவி நியமனங்களில் தற்போதைய ஒருதலைப்பட்ச நடைமுறைகளை மாற்றி, அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாரிசு அரசியல் என்ற விமர்சனங்களுக்கு இடையே, கட்சியின் அடுத்தகட்ட அதிகார மையம் தொடர்பாக எழுந்துள்ள இந்த விவாதம் திமுகவுக்குள் தற்போது பெரும் சூட்டை கிளப்பியுள்ளது. உதயநிதியின் இளம்படை ஆதரவாளர்களுக்கும், கனிமொழியை ஆதரிக்கும் மூத்த நிர்வாகிகளுக்கும் இடையிலான இந்த அதிகாரப் போட்டியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எவ்வாறு சமரசம் செய்து சமாளிக்கப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
