LATEST NEWS
“என் வெற்றிக்கு வேட்டு வச்சதே நம்ம ஆளுங்க தான்.. மன்னிப்பு கேளுங்க… இல்லைனா மீடியால போடுவேன்…” கட்சி நிர்வாகிகளை கதறவிட்ட தவெக வேட்பாளர் மோகன்..!!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மோகன், சக நிர்வாகி மதனுடன் ஆவேசமாகப் பேசியதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பக்காலம் முதல் கட்சிக்கு உழைத்த உண்மையான தொண்டர்களை ஓரங்கட்டிவிட்டு, புதிய நபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு சிலர் துரோகம் இழைப்பதாக மோகன் பகிரங்கமாகச் சாடியுள்ளார். முன்னாள் அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்துத் தேர்தலில் களம் கண்ட போது, பிரச்சாரத்திற்கு உரிய அனுமதி பெற்றுத் தராமல் திட்டமிட்டுத் தன் வெற்றியைத் தடுத்ததாகவும், சொந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளே தனக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜன், ஒட்டன்சத்திரம் நகரச் செயலாளர் அருண், ஒன்றியச் செயலாளர் சுறா சுரேஷ் மற்றும் தொப்பம்பட்டி மத்திய ஒன்றிய நிர்வாகி ஜின்னா ஆகியோர் எதிர்த்தரப்பிடம் பணம் பெற்றுக்கொண்டு தேர்தல் பணிகளைப் புறக்கணித்ததாக மோகன் குறிப்பிட்டுள்ளார். மேலும், கட்சி அலுவலகத்திற்கு வீடு பிடித்துக் கொடுத்தது முதல் ஃபர்னிச்சர் வாங்கியது வரை மறைமுகமாகக் கையூட்டு பெற்றதற்கான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நிர்வாகிகளின் லஞ்ச அணுகுமுறை, காமவெறி அட்டூழியங்கள் மற்றும் எதிர்த்தரப்புடன் பணப் பரிவர்த்தனை பேசிய வீடியோக்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட வீடியோ ஆதாரங்கள் மற்றும் தனி ஆவணக் கோப்புகள் தயார் நிலையில் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
கட்சித் தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆகியோரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்த இந்த நிர்வாகிகள், ஓரிரு நாட்களில் நேரில் வந்து தார்மீகப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அனைத்து ஆதாரங்களையும் தலைமைக்கும் ஊடகங்களுக்கும் வெளியிட்டு அம்பலப்படுத்தப் போவதாகவும் மோகன் தெரிவித்துள்ளார். ஒட்டன்சத்திரம் தொகுதி தவெக வேட்பாளரே தனது கட்சி நிர்வாகிகள் மீது இத்தகைய கடுமையான ஊழல் மற்றும் உள்ளடி வேலைகள் தொடர்பான புகார்களை முன்வைத்துள்ளது திண்டுக்கல் மாவட்ட தவெக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
