CRIME
. “மகளை கிண்டல் செஞ்சான்…” 2 வருசமா ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தந்தை.. இன்னொரு மாவட்டத்தில் அழுகிய நிலையில் 38 வயது நபர் சடலம்.. நடுங்க வைக்கும் சம்பவம்..!!
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சிவல்சருகு கிராமத்தைச் சேர்ந்த 38 வயது சங்கிலி முருகன் என்பவர், முன்விரோதம் காரணமாகக் காரில் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்ற சங்கிலி முருகன் வீடு திரும்பாததால், அவரது மனைவி செப்டம்பர் 10-ஆம் தேதி செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த பாக்கியசெல்வம் (48) என்பவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், சங்கிலி முருகன் கொலை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
பாக்கியசெல்வத்தின் மகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சங்கிலி முருகன் கிண்டல் செய்ததால் இருவருக்குள்ளும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாகப் பாக்கியசெல்வம் தனது நண்பர்களான முருகன் (42), மருதுபாண்டி (44) உட்பட 4 பேருடன் சேர்ந்து சங்கிலி முருகனை நைசாகப் பேசி காரில் கடத்திச் சென்று, திண்டுக்கல் – கொடைரோடு சாலை அருகே வைத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் சங்கிலி முருகனின் உடலை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சப்பட்டி – துணைக்கோள் நகரத்தில் உள்ள பயன்பாட்டில் இல்லாத கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்குள் வீசியதாகக் குற்றவாளிகள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கொலையாளியின் வாக்குமூலத்தை அடுத்து, திண்டுக்கல் எஸ்பி ஜெயக்குமார் மற்றும் திருமங்கலம் டிஎஸ்பி இமயவர்மன் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சங்கிலி முருகனின் உடலைக் கைப்பற்றினர். உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பாக்கியசெல்வம் உட்பட மூன்று பேரைக் கைது செய்துள்ள போலீசார், தப்பியோடிய மற்றொருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு மாவட்டத்தில் கொலை செய்துவிட்டு மற்றொரு மாவட்டத்தில் உடலை வீசிச் சென்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
