LATEST NEWS
“இது என்னப்பா அதிசயம்.. ஒரே உடலில் இரண்டு தலைகள்..” உள்ளூர் மக்கள் பார்த்த அந்த விசித்திரம் உயிரினம்… நெட்டிசன்களை உறையவைத்த வீடியோ..!!
குஜராத் மாநிலம் தஹோத் மாவட்டத்தில் உள்ள தன்பூர் வனச்சரகப் பகுதியில், அரிய வகை இரட்டைத் தலை பாம்பு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காட்டில் இந்த விசித்திரமான ஊர்வன நடமாடுவதை உள்ளூர் மக்கள் பார்த்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனவிலங்கு மீட்புக் குழுவினர், அந்த அரிய பாம்பைப் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர், அந்தப் பாம்பு தஹோத் நகருக்குக் கொண்டு வரப்பட்டு, வனத்துறை அதிகாரிகளின் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு மீட்புக் குழுவினர் நடத்திய ஆய்வில், இந்த அசாதாரண ஊர்வன விஷமற்ற ‘உல்ஃப் ஸ்நேக்’ எனப்படும் கட்டுவிரியன் போன்ற தோற்றமுடைய ஒரு சாதாரண பாம்பு என்பது கண்டறியப்பட்டுள்ளது. மரபணு குறைபாடு காரணமாக அரிதாகவே இத்தகைய இரட்டைத் தலை பாம்புகள் பிறக்கின்றன என்றும், காடுகளில் இவை உயிர்வாழ்வது மிகவும் கடினம் என்றும் வனவிலங்கு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பார்ப்பதற்கு மிகவும் அரியதாக இருக்கும் இந்த இரட்டைத் தலை பாம்பின் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி, நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றன.
