CRIME
நள்ளிரவில் பயங்கரம்.. வானில் தீப்பிடித்து நொறுங்கிய ராணுவ விமானம்.. உயிர் பிழைத்தவர்கள் யாருமில்லை.. வெளியான அதிர்ச்சித் தகவல்..!!
ரஷியாவின் சைபீரியப் பகுதியில் நேற்று இரவு நிகழ்ந்த ராணுவப் போக்குவரத்து விமான விபத்தில், அதில் பயணித்த 19 பேரும் உயிரிழந்தனர். ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அன்டோனோவ் ஆன்-12 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம், வழக்கமான திட்டமிடப்பட்ட பயணத்தை மேற்கொண்டிருந்தபோது சைபீரியாவின் கெமரோவோ பிராந்தியத்தில் விழுந்து நொறுங்கியது. உயிரிழந்தவர்களில் விமானப் பணியாளர்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெமரோவோ பிராந்தியத் தலைநகரில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள யகுனோவோ கிராமத்திற்கு அருகே இந்தக் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. பிராந்திய ஆளுநர் இல்யா செரெட்யுக் இந்த விபத்து நடந்த இடத்தை உறுதிப்படுத்தியதாக ‘தி மாஸ்கோ டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. தகவல் அறிந்ததும் அவசரகால மீட்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்திற்கான முதற்கட்டக் காரணங்கள் குறித்து ரஷிய செய்தி நிறுவனமான ‘பாஸா’ முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது. விமானத்தின் நான்கு இயந்திரங்களில் ஒன்றில் ஏற்பட்ட எரிபொருள் கசிவால் தீப்பிடித்ததாகவும், அதனைத் தொடர்ந்து ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டு விமானம் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது. எரிபொருள் அமைப்பு முழுமையாகச் சேதமடைந்து ஒரு இயந்திரம் எரிந்துள்ள நிலையில், விபத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய சிறப்புப் புலனாய்வுக் குழுவும், விமான விபத்துகள் புலனாய்வு ஆணையமும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளன.
