CINEMA
“என் வாழ்க்கையின் பெரிய தூணே அவர் தான்…” எதிர்மறை கருத்துகளைப் பற்றி கவலையில்லை..! நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயின் சுவாரஸ்ய தகவல்கள்..!!
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள படம் ‘சிக்மா’. இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க, பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் மற்றும் ஜேசன் சஞ்சயின் ஜேஎஸ்கே மீடியா இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் அளித்த நேர்காணலில் பேசிய ஜேசன் சஞ்சய், “எனது வாழ்க்கையின் பெரிய தூணே எனது அம்மாதான். 24 மணி நேரமும் என்னைப் பற்றியும், எனது சகோதரி பற்றியுமே நினைத்துக் கொண்டிருப்பார். அப்பா, அம்மாவிடம் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள எனக்கு தயக்கமாக இருக்கும், ஆனால் எனது சகோதரியிடம் எல்லா விஷயங்களையும் மனம் திறந்து பேசுவேன்” எனக் கூறியுள்ளார். மேலும், சென்னையில் நள்ளிரவில் நண்பர்களுடன் காரில் பயணம் செய்வதும் பிரியாணி, பரோட்டா உணவுகளும் தனக்கு பிடிக்கும் என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே தனக்குத் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு நிறைய அன்பும் எதிர்பார்ப்புகளும் கிடைக்கின்றன, எனவே நான் நேர்மறையான கருத்துகளை மட்டுமே எடுத்துக்கொள்வேன். திரையுலகிற்குள் நுழைவது எனக்கு எளிதாக இருந்தது என்பது போன்ற எதிர்மறையான கருத்துகள் வந்தால் கவலைப்பட மாட்டேன். மக்கள் படத்தைப் பார்க்கும்போது படத்தின் இயக்குனரைப் பற்றி பேசாமல், அந்தப் படத்தை மட்டுமே பார்ப்பார்கள்” என்று மனம் திறந்து கூறியுள்ளார்.
