CRIME
‘திரிஷ்யம்’ பட பாணியில் நடந்த கொடூரம்.. கணவனை கொன்று பாத்ரூம் தரைக்கடியில் புதைத்த மனைவி.. நடந்தது என்ன..? பதறவைக்கும் பின்னணி..!!
ஆக்ராவின் சிகந்திரா பகுதியைச் சேர்ந்த ரூபி என்ற பெண், கடந்த ஜூன் 17-ஆம் தேதி இரவு தன் கணவர் சுரேந்திர குமார் சர்மாவுக்குப் பாயாசத்தில் அதிகளவு தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துக் கொலை செய்துள்ளார். மறுநாள் காலையில், தனது மாமியார் மற்றும் மகள்களை உறவினர் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, குளியலறையின் தரையை உடைத்துக் கணவரின் சடலத்தை உள்ளே தள்ளி, அதன் மேல் உப்பு மற்றும் மண்ணைப் போட்டு மூடியுள்ளார். அடுத்த நாள் ஒரு கொத்தனாரை வரவழைத்து அந்தத் தரையை சிமெண்ட் பூசி புதிய தரை போல மாற்றியுள்ளார். அதன் பிறகு, தன் கணவரைக் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துவிட்டு, கடந்த 46 நாட்களாகப் போலீசாரையும் உறவினர்களையும் ஏமாற்றி வந்துள்ளார்.
இந்த 46 நாட்களும் கணவரின் சடலம் புதைக்கப்பட்டிருந்த அதே குளியலறையில்தான் ரூபி தினமும் குளித்து வந்துள்ளார். பிரபல சஸ்பென்ஸ் படமான ‘திரிஷ்யம்’ படத்தின் கதையை நினைவில் வைத்துக்கொண்டு, சிறைக்குச் செல்லாமல் தப்பிப்பதற்காக இந்த வழியைக் கையாண்டதாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு சுரேந்திரா மீது பதியப்பட்ட ஒரு பழைய வழக்கு தொடர்பாக, போலீசார் வழக்கமான விசாரணைக்காக ரூபியின் வீட்டுக்கு வந்து அவருடைய புகைப்படத்தை ஆன்லைன் சரிபார்ப்புக்காக எடுத்தபோது அவர் பயந்துபோனார். போலீஸ் தன்னை நெருங்கிவிட்டதாக எண்ணி அஞ்சிய ரூபி, தனது கணவரின் அண்ணனிடம் உண்மையை ஒப்புக்கொண்டார். அவர் உடனடியாக போலீசுக்குத் தகவல் கொடுத்ததை அடுத்து இந்த கொடூரக் கொலை வெளிச்சத்திற்கு வந்தது.
தற்போது ரூபியைக் கைது செய்துள்ள போலீசார், குளியலறைத் தரையைத் தோண்டி சுரேந்திராவின் எலும்புக்கூட்டை மீட்டுள்ளனர். ஒரு பெண்ணால் தனியாக இவ்வளவு நீளமான குளியலறைத் தரையை உடைத்து, சடலத்தை இழுத்துச் சென்று புதைக்க முடியுமா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. எனவே, இந்த கொலையில் ரூபிக்கு உதவியாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக ரூபியின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டு, அவருடைய அழைப்பு விவரங்கள் மற்றும் கூகுள் தேடல் வரலாறு ஆகியவற்றைச் சோதித்து வருகின்றனர்.
