CRIME
போலீஸுக்கே இந்த நிலைமையா..? நடுரோட்டில் அரங்கேறிய வெறிச்செயல்… சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய 14 பேர் கூண்டோடு கைது..!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று போக்குவரத்து போலீஸ் அதிகாரியை காரில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து, நடுரோட்டில் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது தொடர்பாக 14 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாக்பூரின் மான்காபூர் ரிங் ரோட்டில் ஜூன் 28-ஆம் தேதி இரவு இச்சம்பவம் நடந்துள்ளது. எம்.ஐ.டி.சி போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் குனால் சிங் என்ற போலீஸ் அதிகாரி, தனது சொந்த காரில் மார்ட்டின் நகர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக 7 முதல் 8 இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர் கும்பல், ஆபத்தான முறையில் பைக் ஸ்டண்ட்களில் ஈடுபட்டு, தாறுமாறாக ஓட்டி வந்துள்ளனர். இதில் ஒரு பைக், போலீஸ் அதிகாரியின் காரின் மீது லேசாக உரசியுள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது வன்முறையாக மாறியது.
அந்த பைக் கும்பல் போலீஸ் அதிகாரியின் காரை வழிமறித்து, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, காரில் இருந்து வெளியே இழுத்து பயங்கரமாக தாக்கியுள்ளனர். மேலும் காரின் கண்ணாடிகளை உடைத்து வாகனத்தையும் சேதப்படுத்தினர். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், மான்பூர் காவல் நிலையத்தினர் தீவிர விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்ட ஹர்ஷ் பவார், கௌரவ் கிதரே உள்ளிட்ட 14 பேரை அதிரடியாகக் கைது செய்து, அவர்களிடம் இருந்த 5 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
