CRIME
“மகனின் உடல் மட்டும் போதும்… புருஷன் உடல் வேண்டாம்..! 5 தடவை போன் பண்ணியும் கணவன் உடலை வாங்க வராத மனைவி… நொய்டாவை உலுக்கிய கொடூரம்..!!
நொய்டா செக்டர்-121 கடி சௌகண்டி பகுதியில், தூங்கிக் கொண்டிருந்த தந்தை ராஜு சர்மாவை 16 வயதான மகன் அம்ரித் கோடரியால் வெட்டிக் கொலை செய்தார். பின்னர் அந்த சிறுவன் செக்டர்-52 மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்று ரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொண்டான். உடற்கூறாய்வுக்குப் பிறகு, தாய் வந்து தன் மகன் அம்ரித்தின் சடலத்தை மட்டும் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். ஆனால், உயிரிழந்த கணவர் ராஜு சர்மாவின் உடலை வாங்க அவர் வரவில்லை. காவல்துறையினர் 5-க்கும் மேற்பட்ட முறை அவருக்குத் தொலைபேசி வாயிலாக அழைத்தும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி, காவல் துறையினர் உயிரிழந்தவரின் சகோதரரை வரவழைத்து உடலை ஒப்படைத்து இறுதிச்சடங்கை செய்ய வைத்தனர்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ ஸ்டீல் சிட்டியைச் சேர்ந்த ராஜு சர்மா, முன்னதாக செக்டர்-73-ல் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்தது தெரியவந்தது. அங்கு தந்தைக்கும் மகனுக்கும் இடையே பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது. ராஜு சர்மா மிகவும் கடுமையான மற்றும் பிடிவாத குணமுடையவராக இருந்துள்ளார். அவர் தன் மகனை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. டியூஷன் எடுக்க வெளியே செல்லும்போது கூட, மகனை வீட்டுக்குள் வைத்து வெளியிலிருந்து பூட்டிவிட்டுச் சென்று விடுவார். இதைப் பற்றி வீட்டு உரிமையாளர் கேட்டபோது, தன் மகன் 11-ஆம் வகுப்பு படிப்பதாகவும், தன் மனைவி 2021 முதலே தனியாகப் பிரிந்து வாழ்வதாகவும் கூறியிருந்தார். ராஜுவின் இந்த விசித்திரமான மற்றும் கொடூரமான குணத்தின் காரணமாக, அவருடைய உறவினர்களும் அவருடன் தொடர்பில் இருக்கவில்லை.
சம்பவத்தன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், தந்தை தூங்கிக் கொண்டிருந்தபோது அம்ரித் அவரது தலையில் கோடரியால் வெட்டியுள்ளான். அதிக ரத்தப்போக்கு காரணமாக தந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அந்த 4 மாடி கட்டிடத்திலிருந்து தோளில் பையுடன் தயாராகி வெளியேறிய சிறுவன், செக்டர்-52 மெட்ரோ ரயில் நிலையத்தை அடைந்து ரயில் முன் குதித்து தனது உயிரை மாய்த்துக்கொண்டான். கணவன்-மனைவி இருவரும் 2021 முதலே பிரிந்து வாழ்ந்து வந்த சூழலில், இக்கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
