CRIME
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சும்மாவா சொல்றாங்க.? என் ரீல்ஸ் பார்த்து நக்கலா உனக்கு..? 3 வருட நண்பனை கத்தியால் குத்தி கொன்ற இளைஞர்.. பெரும் பயங்கரம்..!!
கர்நாடக மாநிலம் துமகூரு நகரின் ஹெக்டே காலனியைச் சேர்ந்த 25 வயது வாலிபர் சுஹைல். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ரப்பான் என்பவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக மிக நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, இவர்கள் இருவரும் தங்களது மற்ற நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள ஒரு கடைக்கு வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அனைவரும் தங்களது மொபைலில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, சுஹைல் தனது நண்பர் ரப்பானை வம்புக்கு இழுத்து கிண்டல் செய்யத் தொடங்கினார். ரப்பான் ஆரம்பத்தில் அமைதியாக இருந்தபோதிலும், சுஹைல் தொடர்ந்து எல்லை மீறி கேலி செய்ததால் ஆத்திரமடைந்தார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் கைக்கலப்பாக மாறியது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ரப்பான், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுஹைலை சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சுஹைலை மற்ற நண்பர்கள் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து திலக் பார்க் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஆரம்பத்தில் சுஹைலின் குடும்பத்தினர், பணப் பரிவர்த்தனை தகராறு காரணமாகவே இந்த கொலை நடந்ததாகக் குற்றம் சாட்டினர். ஆனால், சம்பவ இடத்தில் இருந்த மற்ற நண்பர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது, வெறும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கேலி கிண்டலால் மட்டுமே இந்த விபரீதம் நடந்தது என்ற உண்மை வெளிவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த குற்றவாளி ரப்பானை போலீஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
