LATEST NEWS
உஷார்..! “வீட்ல இருந்தே சம்பாதிக்கலாம்” மெழுகுவர்த்தி பேக்கிங் பெயரில் 8,000 பேரிடம் ரூ.50 கோடி சுருட்டிய பலே தம்பதி… கர்நாடகா, தமிழகத்தை உலுக்கிய மோசடி..!!
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ‘ஸ்ரீ காளிகாதேவி எண்டர்பிரைசஸ்’ என்ற போலி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் மெழுகுவர்த்தி, பேப்பர் பிளேட் மற்றும் விளக்குகள் போன்ற அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களை வீட்டிலிருந்தபடியே பேக்கிங் செய்யும் எளிய வேலை மூலம் தாராளமாகச் சம்பாதிக்கலாம் என விளம்பரம் செய்தது. கோலார், பெங்களூரு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டிலும் தனது கிளைகளைப் பரப்பி, சுமார் 7,000 முதல் 8,000 பொதுமக்களை இந்நிறுவனம் தனது வலையில் வீழ்த்தியது.
ஆரம்பத்தில் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, பேக்கிங் வேலை மற்றும் முதலீட்டிற்கு அதிக கமிஷன் தொகையை நிறுவனம் முறையாக வழங்கியது. இதனை நம்பி மக்கள் லட்சக்கணக்கில் அட்வான்ஸ் டெபாசிட் தொகையைச் செலுத்தினர். பல கோடி ரூபாய் சேர்ந்தவுடன், கமிஷன் கொடுப்பதை நிறுத்திவிட்டு நிறுவனத்தின் முக்கியப் புள்ளிகள் அலுவலகத்தைப் பூட்டிவிட்டுத் தலைமறைவாகினர். இது தொடர்பாகப் புகார்கள் குவிந்ததை அடுத்து, விரைந்து செயல்பட்ட போலீஸார் இந்த மோசடி நெட்வொர்க்கின் சூத்திரதாரிகளான கணவன்-மனைவி பூமி கிரண் ஷெட்டி (28) மற்றும் ஆர்த்தி (23) உட்பட ரம்யா, வெங்கடசலபதி ஆகிய 4 முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்த மோசடியில் ஏமாந்தவர்களில் பெரும்பாலானோர் ஏழை எளிய தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆவர். பலர் தங்களது வாழ்நாள் சேமிப்பு, நிலத்தை விற்ற பணம் மற்றும் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்காக வைத்திருந்த தங்க நகைகளை அடகு வைத்து இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனர். தற்போது வரை கோலாரின் கல்பெட் காவல் நிலையத்தில் மட்டுமே 350-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை முடக்கும் பணிகளைத் தொடங்கியுள்ள போலீஸார், பொதுமக்களின் பணத்தை மீட்பதற்கான தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
