CRIME
அடக்கொடுமையே..! நாய் அசுத்தம் செய்ததை கேட்டது ஒரு குத்தமா..? ஆத்திரத்தில் 5 முறை கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை..! தெலங்கானாவை உலுக்கிய கொடூர சம்பவம்..!!
தெலங்கானா மாநிலம் கம்மம் நகரத்தின் த்ரீ டவுன் காவல் எல்லைக்குட்பட்ட ரங்கநாயகுல குட்டா பகுதியில் மிகவும் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. செல்லப் பிராணி நாய் மலம் கழித்ததில் எழுந்த சாதாரண தகராறு காரணமாக 24 வயதான பிளெக்ஸி போர்டு அமைக்கும் தொழிலாளியான தண்டேதி ஸ்ரீநாத் என்பவர் கொடூரமாகக் குத்திக் கொல்லப்பட்டார். வியாழக்கிழமை இரவு 10:30 மணியளவில் ஸ்ரீநாத் தனது வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் அமர்ந்திருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த வேமுலா மது என்பவர் தனது வளர்ப்பு நாயை நடைப்பயிற்சிக்காக அழைத்து வந்துள்ளார். அப்போது அந்த நாய் ஸ்ரீநாத் அமர்ந்திருந்த ஆட்டோவின் அருகிலேயே மலம் கழித்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்ட ஸ்ரீநாத், ஆட்டோ அருகில் அசுத்தம் செய்ததற்காக மதுவிடம் கடுமையாகக் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு தீவிரமடைந்தது. இதில் ஆத்திரமடைந்த மது, உடனடியாக அருகில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கூர்மையான கத்தியை எடுத்து வந்து, ஸ்ரீநாத்தைக் கண்மூடித்தனமாக 5 முறை கத்தியால் குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்த ஸ்ரீநாத் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடியபோதிலும், அருகில் இருந்த ஒரு கால்வாயில் மயங்கி விழுந்தார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கம்மம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; ஆனால், அதிக இரத்தப்போக்கு காரணமாக அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கம்மம் ஏசிபி கூறுகையில், உயிரிழந்த ஸ்ரீநாத் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மது ஆகிய இருவருக்கும் இடையே முன்பகையோ அல்லது பழக்கமோ இல்லை என்றும், சம்பவத்தின் போது இருவருமே எந்தவித போதைப்பொருளின் தாக்கத்திலும் இல்லை என்றும் தெரிவித்தார். முற்றிலும் செல்லப் பிராணி மலம் கழித்ததால் ஏற்பட்ட திடீர் ஆத்திரத்தின் விளைவாகவே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது எனத் தெரிவித்த காவல்துறை, தப்பியோடிய வேமுலா மதுவைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகிறது.
