LATEST NEWS
என்னது… இந்த கருப்பு முட்டைய சாப்டா… 7 ஆண்டுகள் ஆயுளைக் கூட்டுமா..? வைரலாகும் ஜப்பானின் விசித்திரக் கதை..!!
சமூக ஊடகங்களில் சமீபத்தில் ஜப்பானின் “கருப்பு முட்டைகள்” குறித்த வீடியோ ஒன்று மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த விசித்திரமான முட்டைகளைச் சாப்பிட்டால் ஒரு மனிதனின் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் வரை அதிகரிக்கும் என்று ஒரு தகவல் பரவி உலகளவில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கேட்பதற்கு இது ஏதோ கற்பனைக் கதை போலத் தோன்றினாலும், ஜப்பானில் இந்த முட்டைகள் உண்மையில் கிடைக்கின்றன. இதனைப் பார்ப்பதற்கும், இதன் சுவையை அறிவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிகின்றனர்.
ஜப்பானின் ஹகோன் பகுதியில் உள்ள ஓவாகுடானி என்ற பள்ளத்தாக்கு இந்த தனித்துவமான முட்டைகளுக்குப் பெயர் பெற்றது. இது ஒரு எரிமலைச் செயல்பாடுகள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள இயற்கை வெந்நீர் ஊற்றுகளிலும், எரிமலைப் புகையிலிருந்தும் வெளிவரும் கந்தக நீரிலும் இந்த முட்டைகள் வேகவைக்கப்படுகின்றன. இந்த நீரில் உள்ள இரும்பு மற்றும் கந்தகக் தாதுக்கள் முட்டையின் ஓட்டுடன் வேதிவினை புரிந்து, அதன் மீது ‘அயன் சல்பைடு’ என்ற அடுக்கு படிவதால் முட்டையின் ஓடு முற்றிலும் கரிய நிறமாக மாறுகிறது. ஆனால், இந்த முட்டையை உடைத்துப் பார்த்தால் உள்ளே இருக்கும் பகுதி சாதாரண அவித்த முட்டையைப் போல வெள்ளையாகவும், மஞ்சள் கருவுடனும் தான் இருக்கும்.
https://www.instagram.com/reel/DZxMNxqzYkw/?utm_source=ig_web_button_share_sheet
இந்தக் கருப்பு முட்டைகளைச் சாப்பிடுவதன் மூலம் ஆயுள் கூடும் என்ற நம்பிக்கை, அந்தப் பகுதியின் பாரம்பரியக் கதைகள் மற்றும் உள்ளூர் நம்பிக்கைகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. ஆர்வம் மற்றும் பொழுதுபோக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் இதனை விரும்பிச் சாப்பிட்டாலும், இந்த முட்டையைச் சாப்பிடுவதால் ஆயுள் அதிகரிக்கும் என்ற கூற்றுக்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமோ அல்லது மருத்துவப்பூர்வமான நிரூபணமோ இல்லை என்று சுகாதார வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
