“எங்களை மீறி போக முடியாதுடா..” 100 கி.மீ வேகத்தில் பறந்த கார்… 32 கிலோமீட்டர் கார் போனட்டில் தொங்கிட்டே போன போலீஸ்..! கோவையில் நடந்த சினிமா பாணி துரத்தல்..!! – cinefeeds
Connect with us

CRIME

“எங்களை மீறி போக முடியாதுடா..” 100 கி.மீ வேகத்தில் பறந்த கார்… 32 கிலோமீட்டர் கார் போனட்டில் தொங்கிட்டே போன போலீஸ்..! கோவையில் நடந்த சினிமா பாணி துரத்தல்..!!

Published

on

கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் தலைமை காவலர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட சொகுசு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். காரில் 3 பேர் இருந்த நிலையில், காரின் பின்புறம் சில மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை தலைமை காவலர் வேல்முருகன் கவனித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த காரில் இருந்த கும்பல், மாட்டிக்கொள்வோம் என்று அஞ்சி திடீரென காரை எடுத்துக்கொண்டு அதிவேகத்தில் தப்பிச் செல்ல முயன்றது.

இதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட தலைமை காவலர் வேல்முருகன், குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும் என்ற துணிச்சலில் பாய்ந்து சென்று காரின் முன்பகுதி (போனட்) மீது ஏறிப் பிடித்துத் தொங்கியபடியே சென்றார். காரை நிறுத்தாமல் அந்த கும்பல் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் விரட்டியது. தலைமை காவலர் வேல்முருகன் உயிருக்குப் போராடியபடி காரைப் பிடித்து தொங்கிய நிலையில், இதைப் பார்த்த சக போலீசார் உடனடியாகத் தங்கள் வாகனத்தில் அந்த காரைப் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். விளாங்குறிச்சி, கணியூர் சுங்கச்சாவடிகளைக் கடந்து கார் நிறுத்தப்படாமல் சென்றதால், கோவில்பாளையம் போலீசார் உடனடியாக திருப்பூர் மாவட்டம் அவிநாசி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

Advertisement

தகவல் கிடைத்ததும் அவிநாசி போலீசார், தேசிய நெடுஞ்சாலையில்ச் சென்ற மற்ற வாகனங்களைச் சீராக நிறுத்தி செயற்கையாகப் பெரும் ‘டிராபிக் ஜாம்’ (போக்குவரத்து நெரிசல்) உருவாக்கினர். அதில் அந்த சொகுசு கார் சிக்கி நிற்கவே, தப்பி ஓட முயன்ற 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், கர்நாடகாவில் இருந்து தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து பல லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களையும் காரையும் பறிமுதல் செய்த கோவில்பாளையம் போலீசார், 3 பேரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுமார் 32 கி.மீ. தூரம் தலைமை காவலரை காரில் தொங்கவிட்டபடியே சென்ற இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in