LATEST NEWS
3 மருத்துவமனைகள் மீது அடுத்தடுத்து தாக்குதல்..! இடிபாடுகளுக்குள் சிக்கிய ஈரானின் புதிய தலைவர்… பகீர் தகவலை வெளியிட்ட நிபுணர்கள் சபை..!!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து பிப்ரவரி 28 அன்று நடத்திய தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் படுகாயங்களுடன் உயிர் தப்பியதாக நம்பப்படும் அயத்துல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி, மார்ச் 8 அன்று ஈரானின் அடுத்த உச்ச தலைவராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், பிப்ரவரி 28 தாக்குதலுக்கு பிறகு அவர் ஒருமுறை கூட பொதுவெளியில் தோன்றவில்லை; 6 மாதங்கள் கழித்து நடந்த தனது தந்தையின் இறுதிச்சடங்கிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இதனால் அவர் பலத்த காயமடைந்திருக்கலாம் என மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன.
இந்நிலையில், ஈரானின் நிபுணர்கள் சபையின் (Assembly of Experts) உறுப்பினரான மொஹ்சென் ஹெய்தாரி, கதார் நாட்டின் ‘அல் அரபி’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொடக்கத்தில் காயமடைந்த மொஜ்தபா காமேனி சிகிச்சைக்காக தெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகும், தெஹ்ரானில் உள்ள 3 மருத்துவமனைகள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதில், 3-வது மருத்துவமனையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது இடிபாடுகளுக்குள் சிக்கிய மொஜ்தபா காமேனி, உயிருடன் மீட்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்முறை குறித்தும் ஹெய்தாரி விவாதித்தார். நிபுணர்கள் சபையின் செயலகம் அமைந்திருந்த கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்ட போதிலும், இரகசியமான இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 59 உறுப்பினர்களில் 50 பேரின் வாக்குகளைப் பெற்று மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதாக அவர் கூறினார். ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் அறிவிப்பு வெளியாகும் வரை தான் தேர்ந்தெடுக்கப்பட்ட விவரம் மொஜ்தபாவுக்கே தெரியாது என்றும், எதிரிகளின் தாக்குதல் சூழலைக் கருத்தில் கொண்டு அவர் தலைமை ஏற்கத் தகுதியானவர் எனத் தீர்மானித்துத் தேர்வு செய்யப்பட்டதாகவும் ஹெய்தாரி தெரிவித்துள்ளார்.
