LATEST NEWS
இப்படியொரு ஆசையா..? 60 ஆண்டு தீரா ஆசை… 5 மூட்டை லாட்டரி சீட்டுகள்… ரூ.2 கோடியை இழந்து நடுத்தெருவுக்கு வந்த கேரள முதியவர்..!!
கேரள மாநிலத்தில் அதிர்ஷ்டத்தை நம்பி கடந்த 60 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி, தனது வாழ்நாளில் சுமார் ரூ.2 கோடி வரை பணத்தை இழந்த 80 வயது முதியவரின் லாட்டரி மோகம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் கரிவெல்லூர் அருகே உள்ள பாலக்குண்னு பகுதியைச் சேர்ந்த பி.பி. ராகவன் என்ற இந்த விவசாயி, கடந்த 1967-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறார்.
என்றாவது ஒரு நாள் தனக்குப் பெரிய அளவில் பம்பர் பரிசு அடிக்கும், அதன் மூலம் தனது வாழ்க்கை முற்றிலும் மாறிவிடும் என்ற தீரா ஆசையில் இவர் இந்தச் செயலைத் தொடர்ந்துள்ளார். இந்த லாட்டரி மோகத்தின் காரணமாகத் தனது கடின உழைப்பால் சேர்த்த விவசாய நிலம் மற்றும் மனைவியின் நகைகள் உள்ளிட்ட பலவற்றையும் இவர் இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகையைச் செலவழித்த போதிலும் இவருக்குச் சில முறை மட்டுமே, அதுவும் வெறும் ஆயிரக்கணக்கில் தான் பரிசுகள் கிடைத்துள்ளன.
இதனால் கடுமையான கடன் தொல்லைக்கு ஆளான போதிலும், ராகவன் இன்று வரை லாட்டரி சீட்டு வாங்குவதை நிறுத்தவில்லை. மேலும், கடந்த 60 வருடங்களாகத் தான் வாங்கிய பழைய லாட்டரி சீட்டுகள் அனைத்தையும் வீணாக்காமல் வீட்டில் மூட்டையாகக் கட்டி வைத்துள்ளார். தற்போது இவரது வீட்டில் 5 மூட்டைகள் நிறைய பழைய லாட்டரி சீட்டுகள் குவிந்து கிடக்கின்றன. படித்தவர்கள் அதிகம் வாழும் கேரள மாநிலத்தில், முதியவர் ஒருவர் அதிர்ஷ்டத்தை நம்பி தனது சொத்துக்களை இழந்துள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
