LATEST NEWS
“நல்ல வேளை சட்டசபைக்கு போகல” எனச் சொன்ன ஸ்டாலின்… இப்போது கொளத்தூர் இடைத்தேர்தலில் நிற்பாரா..?!
த.வெ.க எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மரணம் அடைந்துள்ள நிலையில், காலியான கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில், 15 ஆண்டுகளாக 3 முறை (2011, 2016, 2021) கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த மு.க. ஸ்டாலின், த.வெ.க-வின் வி.எஸ். பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சென்னையில் நடைபெற்ற தி.மு.க முப்பெரும் விழாவில் பேசிய மு.க. ஸ்டாலின், ரீல்ஸ் வெறிபிடித்த ஆளுங்கட்சியினரால் நூற்றாண்டு புகழ்பெற்ற சட்டமன்றம் கூட தனது மாண்பை இழந்து நிற்பதாக விமர்சித்தார். மேலும், அந்தக் கொடுமைகளை எல்லாம் பார்க்காமல் இருப்பதற்கு கொளத்தூர் தொகுதி மக்களுக்கு கோடான கோடி நன்றி என்றும், நல்ல வேளையாக சட்டசபைக்கு செல்லவில்லை என்றும் அவர் பேசியிருந்தார்.
தற்போது வி.எஸ். பாபு மறைவால் கொளத்தூர் தொகுதி காலியாகி, ஏற்கனவே காலியாக உள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகளுடன் 6-வதாக இணைந்துள்ளது. இந்த 6 தொகுதிகளுக்கும் விரைவில் ஒரே கட்டமாக இடைத்தேர்தல் நடத்தப்படும் எனத் தெரியவரும் நிலையில், முன்பு திருச்சி கிழக்கு மற்றும் கரூர் தொகுதிகளில் போட்டியிட வலியுறுத்தப்பட்டபோதும் இசைந்து கொடுக்காத மு.க. ஸ்டாலின், தனது பேச்சின் அடிப்படையில் கொளத்தூர் இடைத்தேர்தலில் களம் காண்பாரா இல்லையா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
