LATEST NEWS
மோடி – விஜய் ஆடும் மங்காத்தா ஆட்டம்..! சரண்டராகும் ரத்தீஷால் பொங்கலுக்கு உதயநிதி கைதா..? – டெல்லி வட்டாரங்கள் சொல்லும் பகீர் பின்னணி..!!
தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே, திமுகவுக்கு எதிரான ஊழல் நடவடிக்கைகள் ஒரு இணக்கமான அரசியல் நட்பை உருவாக்கியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியமைத்த கையோடு டெல்லி சென்ற விஜய், திமுக ஆட்சியில் நடந்த ஊழல் வழக்குகளில் தனது அரசு சமரசமின்றி நடவடிக்கை எடுக்கும் என்றும், அதற்கு மத்திய அரசின் முழு ஒத்துழைப்பு தேவை என்றும் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்குப் பிரதமர் மோடியும் முழு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்தே, திமுகவுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் மு.க. ஸ்டாலினை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றபோது, தங்களுக்கு எதிரான ஊழல் புகார்களை அவர் கண்டுகொள்ள மாட்டார் எனத் திமுக தரப்பு நினைத்திருந்த நிலையில், அடுத்தடுத்த கைது நடவடிக்கைகள் அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன.
முதலமைச்சர் விஜய்யின் இலக்கு சிறிய புள்ளிகள் அல்ல, நேரடியாகத் தலைமையேதான் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. ஊழல்களுக்கு உடந்தையாக இருந்தவர்களை விட, திமுகவின் முதல் குடும்பம் மற்றும் முக்கிய முன்னாள் அமைச்சர்களையே குறிவைத்துத் தவெக அரசு காய் நகர்த்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே அன்பில் மகேஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக கே.என். நேருவைக் கைது செய்வதற்கான பணிகள் தயாராகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து, வரும் பொங்கல் பண்டிகைக்குள் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்யும் வகையில் முதலமைச்சர் விஜய் தனது வியூகங்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் மிகப்பெரிய டாஸ்மாக் ஊழல் வழக்கில், முக்கிய மூளையாகச் செயல்பட்டுத் தற்போது துபாயில் தலைமறைவாக இருக்கும் ரத்தீஷை வளைக்கத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரத்தீஷைக் கைது செய்து விசாரித்தால், அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினை எளிதாகச் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க முடியும் என முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக ரத்தீஷுக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, சிபிஐ உதவியுடன் இன்டர்போல் மூலம் அவரைக் கைது செய்து தமிழகம் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரத்தீஷ் ஒப்படைக்கப்பட்டதும் அவரிடம் நடத்தப்படும் விசாரணையைத் தொடர்ந்து உதயநிதிக்கு சம்மன் அனுப்பப்படலாம் அல்லது அதற்கு முன்பாகவே அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி, அதன் முடிவில் கைது நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தவெக அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்குப் பிரதமர் மோடி தரப்பிலிருந்து முழுமையான பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ள நிலையில், உதயநிதியைக் காப்பாற்றத் திமுக தரப்பு டெல்லி பாஜக மேலிடத்தின் உதவியை நாடி வருவதாகப் பேசப்படுகிறது. ஆனால், இது குறித்து டெல்லி வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘மங்காத்தா’ திரைப்படத்தில் அஜித் மற்றும் அர்ஜுன் இணைந்து விளையாடுவதைப் போல, திமுகவுக்கு எதிராகப் பிரதமர் மோடியும் முதல்வர் விஜய்யும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர். இதனால், டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் பொங்கலுக்குள் உதயநிதியைக் கைது செய்ய முதல்வர் விஜய் எடுக்கும் எந்தவொரு முயற்சிக்கும் பிரதமர் மோடி தடையாக இருக்க மாட்டார் என்றும், முழு ஒத்துழைப்பையே வழங்குவார் என்றும் டெல்லி அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
