LATEST NEWS
“ரூ.500 பத்திரம் முதல் ரூ.249 கோடி சர்ச்சை வரை..” லக்னோ விமான நிலைய ஒப்பந்தத்தில் அதானி குழுமத்துக்கு சிக்கலா..? வெளியான அதிர்ச்சித் தகவல்..!!
லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தை 50 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கவும், மேம்படுத்தவும் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம், வெறும் 500 ரூபாய் மதிப்பிலான முத்திரைத் தாளில் நிறைவேற்றப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் அதானி லக்னோ இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் இடையே கையெழுத்தான இந்தச் சலுகை ஒப்பந்தத்தில், சுமார் 249.63 கோடி ரூபாய் வரை முத்திரைத் தீர்வைக் குறைபாடு இருக்கலாம் என உத்தரப்பிரதேச அரசு அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பிப்ரவரி 14, 2020 அன்று 1,258.80 ஏக்கர் விமான நிலைய நிலத்திற்கான 50 ஆண்டு கால ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், அசல் மின்னணு முத்திரைத் தாள் சான்றிதழில் இது ‘பிரிவு 5 – பொது ஒப்பந்தம்’ என வகைப்படுத்தப்பட்டு, சொத்து விவரம் ‘பொருந்தாது’ என்றும், பரிமாற்றத் தொகை பூஜ்ஜியம் என்றும் பதிவு செய்யப்பட்டு வெறும் ரூ.500 மட்டுமே முத்திரைத் தீர்வாகச் செலுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூன் 4, 2022 அறிக்கையில் ரூ.10.02 கோடி குறைபாடு கணக்கிடப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 6, 2022 துணை மதிப்பீட்டு அறிக்கை, எட்டு கிராமங்களில் பரவியுள்ள 1,018.835 ஹெக்டேர் நிலத்தை ரூ.3,566.07 கோடியாக மதிப்பிட்டு, ரூ.249.63 கோடி அளவுக்கு முத்திரைத் தீர்வைக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
விமான நிலையக் கட்டிடங்கள் மற்றும் இதர சொத்துகளின் மதிப்பீடு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், இந்த நிலப் பதிவேடுகளில் இந்திய விமான நிலைய ஆணையம், உத்தரப்பிரதேச அரசு மற்றும் பாதுகாப்புத் துறை நிலங்களும் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே, 1899-ஆம் ஆண்டு இந்திய முத்திரைத் தாள் சட்டத்தின் பிரிவு 33-இன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க ஜூலை 18, 2022 அன்று உத்தரவிடப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துப் பதிலளித்துள்ள அதானி குழுமம், திறந்த போட்டி ஏலம் மூலமே விமான நிலைய நிர்வாக உரிமை வழங்கப்பட்டதாகவும், நிலத்தின் உரிமை இப்போதும் இந்திய விமான நிலைய ஆணையத்திடமே உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது. மேலும், வணிக ரகசியம் காரணமாகச் சில ஆவணங்களைப் பகிர முடியாது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ரூ.249.63 கோடி என்பது இறுதித் தொகை இல்லை என்றாலும், பொது உள்கட்டமைப்பு மற்றும் நில மதிப்பீடு குறித்து அதிகாரிகள் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
