LATEST NEWS
“எனக்கு உதவி செய்யுங்க சார்..” வெளிநாட்டில் சாப்பாட்டுக்கே வழியின்றி தவித்த ஏழைத் தொழிலாளியின் மகள்.. ஒற்றை அழைப்பில் ரூ.6 லட்சம் கொடுத்து காப்பாற்றிய அமைச்சர்..!!
ஜெர்மனியில் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதால் தவித்த சென்னை ஐஐடி முன்னாள் மாணவி பரிமளாவுக்கு, தெலங்கானா சாலைகள், கட்டடங்கள் மற்றும் திரைப்படத் துறை அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். கோமதிரெட்டி பிரதீக் ரெட்டி அறக்கட்டளை மூலம் இந்த உதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அவரது கல்விக்காக வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்தையும் சேர்த்து, மாணவிக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியுதவி ரூ.16 லட்சமாக உயர்ந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் தேவரகொண்டாவைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளியின் மகளான பரிமளா, சென்னை ஐஐடியில் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து முதுகலைப் படிப்பிற்காக ஜெர்மனி சென்றார். ஆனால், ஜெர்மனி சென்றடைந்த பிறகு ஆவணங்கள் தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டதால் பல்கலைக்கழகச் சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டதுடன், அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது. இதனால் தனது சொந்தப் பணத்தை எடுக்க முடியாமலும், அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முடியாமலும் அவர் கடும் சிரமத்திற்கு ஆளானார்.
இதையடுத்து பரிமளா அமைச்சரைத் தொடர்பு கொண்டு உதவி கோரிய நிலையில், ஜெர்மனியில் அவரது கல்வி மற்றும் தங்குமிடத்திற்கு எவ்விதத் தடையும் ஏற்படாத வகையில் அமைச்சர் உடனடியாகக் கூடுதலாக ரூ.6 லட்சத்தை ஏற்பாடு செய்து வழங்கினார். இக்கட்டான சூழலில் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றித் துணை நின்ற அமைச்சருக்கு ஜெர்மனியில் இருந்து வீடியோ மூலம் பரிமளா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த நிலையில், தகுதியான மாணவர்களின் கல்விப் பயணத்தில் ஏற்படும் ஒவ்வொரு சவாலிலும் அவர்களுடன் துணை நிற்பதே தங்களின் நோக்கம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
