LATEST NEWS
என்ன கொடுமை இது..? “பெண்களை பெயர் சொல்லி அழைக்கத் தடை..” ஆடு, மாடு’ என அழைக்கும் கொடூரம்… கொதித்தெழும் மனித உரிமை அமைப்புகள்..!!
ஆப்கானிஸ்தானின் ‘பால்க்’ மாகாணத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பெண்களின் இயற்பெயர்களைப் பயன்படுத்துவதைத் தாலிபான் நிர்வாகம் தடை செய்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதிகாரிகளின் உத்தரவின்படி, அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் மருத்துவக் குறிப்புகளில் பெண்களின் பெயர்களுக்குப் பதிலாக ‘பீபி’ (மூத்த பெண்/பாட்டி) என்ற பொதுவான சொல்லைப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் பெண்கள் ‘ஆடு’ அல்லது ‘மாடு’ என்று அழைக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘பொது வெளியில் பெண்களின் பெயர்களை உச்சரிப்பது குடும்ப கவுரவத்திற்கு இழுக்கு’ எனத் தாலிபான்கள் தரப்பில் இதற்கு நியாயம் கற்பிக்கப்பட்டாலும், இது பெண்களின் அடையாளத்தை அழிக்கும் செயலாகவும் பழைமைவாதமாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மருத்துவமனை மருந்து சீட்டுகளில் அனைத்துப் பெண்களுக்கும் ‘பீபி’ என்ற ஒரே சொல்லைப் பயன்படுத்துவதால், நோயாளிகளை அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்பட்டுத் தவறான சிகிச்சை அல்லது மருந்து வழங்கப்படும் அபாயம் உள்ளதாகவும், இதன் மூலம் பெண்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. கடந்த மே மாதம் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த உத்தரவு, தற்போது பால்க் மாகாணத்தில் மட்டுமே நடைமுறையில் உள்ளதாகவும், இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
