LATEST NEWS
“ஒரு நொடி நிலைதடுமாறியினாலும் சோலி முடிஞ்சிது..”பின்னால் எமன் போல வேகமாக வந்த ராட்சத லாரி… உயிரைப் பணயம் வைத்து பைக் ஸ்டண்ட் செய்த இளைஞர்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!
பீகார் மாநில நெடுஞ்சாலையில், அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது நேராக எழுந்து நின்றபடி இளைஞர் ஒருவர் ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தை ஓட்டிக் கொண்டே கைகளை விரித்தபடி சற்றும் அச்சமின்றி அவர் சாகசம் செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு மிக அருகில் பின்னால் ஒரு பிரம்மாண்ட லாரியும் வேகமாக வந்து கொண்டிருந்தது. ஒரு நொடி நிலைதடுமாறி கீழே விழுந்திருந்தாலும், பின்னால் வந்த லாரியின் சக்கரங்களில் சிக்கி அவரது உயிருக்கே பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் அளவிற்கு அந்தச் செயல் மிகக் கொடூரமானதாக அமைந்திருந்தது.
சமூக வலைதளங்களில் லைக்குகள் மற்றும் பார்வைகளுக்காகப் பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இத்தகைய பொறுப்பற்ற செயல் இணையவாசிகளிடையே கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிகளைத் துளியும் மதிக்காமல், தனக்கும் சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட அந்த நபரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற சாகசங்கள் அதிகரித்து வருவது சாலைப் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகி வரும் இந்த வீடியோவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இளைஞரையும் இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணையும் கண்டறிந்து கடும் அபராதம் விதிப்பதுடன், வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலைப் பாதுகாப்பு என்பது அனைவரின் உயிர் சார்ந்த விஷயம் என்பதால், காவல்துறையினர் இதுபோன்ற அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
