LATEST NEWS
விதியின் விசித்திரக் கதை..! 19 ஆண்டுகளுக்கு முன்பு குளிப்பாட்டிய குழந்தை.. இன்று உலகக்கோப்பை பைனலில் எதிரணி வீரர்..! மெஸ்ஸி Vs யமால் சுவாரசிய பின்னணி..!!
உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதவுள்ளன. அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியின் சிறப்பான ஆட்டம் அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்துள்ளது. இந்த இறுதிப்போட்டியில் ஒரு அரிய சுவாரஸ்யமாக, மெஸ்ஸி தான் ஒரு காலத்தில் கைக்குழந்தையாக தனது கைகளில் ஏந்திய ஸ்பெயின் அணியின் 19 வயது இளம் நட்சத்திர வீரரான லாமின் யமாலுக்கு எதிராக நேருக்கு நேர் களம் காண உள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமான யுனிசெப் அமைப்புக்காக நடைபெற்ற ஒரு தொண்டுப் பணி காலெண்டர் போட்டோஷூட்டில் மெஸ்ஸி பங்கெடுத்தார். அப்போது 20 வயதான இளம் கால்பந்து நட்சத்திரமாக வலம் வந்த மெஸ்ஸி, பார்சிலோனாவின் கேம்ப் நௌ மைதானத்தில் ஒரு சிறிய பிளாஸ்டிக் தொட்டியில் வைக்கப்பட்டிருந்த குழந்தையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த குழந்தையே லாமின் யமால் ஆகும். யமாலின் பெற்றோர்கள் யுனிசெப் நடத்திய குலுக்கலில் வெற்றி பெற்றதன் மூலம் பார்சிலோனா வீரருடன் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பைப் பெற்று, விதியின் பயனாக மெஸ்ஸியை சந்தித்துள்ளனர்.
இந்த போட்டோஷூட்டின் போது மெஸ்ஸி மிகவும் கூச்ச சுபாவத்துடன் இருந்ததாகவும், குழந்தையை எப்படி கையாள்வது என்று தெரியாமல் தவித்ததாகவும் அசோசியேட்டட் பிரஸ் புகைப்படக் கலைஞர் விவரித்துள்ளார். பல ஆண்டுகளாக பொதுப் பார்வைக்கு வராமல் இருந்த இந்த அரிய புகைப்படங்கள், பின்னர் 2024 இல் யமாலின் தந்தை மூலமாக இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு வைரலாகின. அன்று மெஸ்ஸியின் கைகளில் குழந்தையாக இருந்த லாமின் யமால், இன்று வெறும் 19 வயதிலேயே ஸ்பெயின் அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக வளர்ந்து, உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மெஸ்ஸியை எதிர்த்து விளையாட உள்ளார் என்பது கால்பந்து ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
