LATEST NEWS
“ஒன்னு கிட்னி மாற்று ஆபரேஷன் செய்யுங்க, இல்ல கருணைக்கொலை பண்ணுங்க” அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த இளம் பெண்கள்..!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்குப் பிறகு சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஐந்து பெண்கள், டயாலிசிஸ் சிகிச்சையின் கடுமையான வலி மற்றும் வறுமை காரணமாகத் தங்களுக்குக் கருணைக்கொலை செய்ய அனுமதிக்குமாறு இந்தியக் குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். ராகினி, சுஷிலா, சுமன், ஆர்த்தி மற்றும் பிங்கி ஆகிய இந்த ஐந்து தாய்மார்களும், தங்களின் கைக்குழந்தைகளைப் பராமரித்துக் கொண்டே டயாலிசிஸ் சிகிச்சையின் தாங்க முடியாத வேதனையை அனுபவித்து வருவதால் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான சுஷிலாவின் கணவர் ஒரு தினக்கூலி தொழிலாளி ஆவார். தங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது பிறந்துள்ள ஆண் குழந்தையையும் சேர்த்து, மருத்துவச் செலவுகளுக்காகப் பெரும் கடனாளியாக மாறியுள்ளதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மற்றொரு பெண்ணான ராகினியின் சகோதரர், மருத்துவமனையில் வழங்கப்பட்ட தரமற்ற மருந்துகளே இந்தச் சிறுநீரக செயலிழப்பிற்கு முக்கியக் காரணம் என்று பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். வலியினாலும், தங்களின் குடும்ப வறுமையினாலும் வேதனைப்படும் இப்பெண்கள், தங்களுக்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்த ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது கருணைக்கொலைக்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நிலேஷ் ஜெயின், நெறிமுறைகளின்படி பிரசவத்திற்குப் பிந்தைய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கானப் பதிவு நடைமுறைகள் 90 நாட்களுக்குப் பிறகே தொடங்கும் என்று விளக்கமளித்துள்ளார். மேலும், அனைத்து நோயாளிகளுக்கும் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படாது என்றும், முறையான டயாலிசிஸ் மூலம் சிறுநீரகச் செயல்பாட்டை மேம்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது மருத்துவமனை நிர்வாகத்தின் முறையான ஆலோசனைகளுக்குப் (Counselling) பிறகு, அந்தப் பெண்கள் தற்காலிகமாகத் தங்களின் சிகிச்சையைத் தொடரச் சம்மதித்துள்ளனர்.
