CRIME
பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.. பேருந்து நிலையத்தில் நடத்துநரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்… அலறி அடித்து ஓடிய பயணிகள்.. அதிர்ச்சி பின்னணி..!!
சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில் கடந்த 13-ஆம் தேதி, முன்விரோதம் காரணமாக அரசுப் பேருந்து தற்காலிக நடத்துநர் நித்தியநாதன் மீது மர்மக் கும்பல் ஒன்று கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவர் ஜெயந்தியின் போது நடத்துநரின் நண்பருக்கும் மற்றொரு கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, நண்பருக்குப் பதிலாக நடத்துநர் நித்தியநாதனைக் குறிவைத்த அந்தக் கும்பல், பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் வைத்தே அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நடந்த இந்தப் பயங்கரத் தாக்குதலைக் கண்ட பயணிகள் அச்சத்தில் அலறி அடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த நடத்துநர் நித்தியநாதன் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பேருந்து நிலையத்தில் நடத்துநர் வெட்டப்பட்ட பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. காயமடைந்த நடத்துநர் நித்தியநாதன் அளித்த புகாரின் பேரில், கொடுங்கையூர் காவல்துறையினர் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் இந்தத் தாக்குதலில் தொடர்புடைய 2 பேரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
