CRIME
’இது தாயின் உரிமை..!’ மருத்துவர்கள் மறுத்த 32 வார கர்ப்பம்.. தாயின் உரிமையை நிலைநாட்டி சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த வரலாற்றுத் தீர்ப்பு..!!
சென்னையில், கருவில் உள்ள குழந்தைக்குக் கடுமையான மூளைப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், 32 வாரக் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் குழந்தையைப் பெற்றெடுத்த பெண் ஒருவர், நடப்பு 2026-ஆம் ஆண்டில் மீண்டும் கர்ப்பமடைந்தார். கர்ப்ப காலப் பரிசோதனைகளின் போது, கருவில் உள்ள குழந்தையின் மூளையில் திரவம் தேங்கும் வென்ட்ரிகுலோமேகலி என்ற கடுமையான பாதிப்பு இருப்பது அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டது. இதனால் குழந்தை பிறந்த பிறகு பேச்சு மற்றும் மொழி வளர்ச்சித் தாமதம், கற்றல் குறைபாடுகள், அறிவாற்றல் பாதிப்பு, வலிப்பு போன்ற கடுமையான கோளாறுகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்ததால், தம்பதியினர் கர்ப்பத்தைக் கலைக்க முடிவு செய்தனர். ஆனால், 24 வார கால அவகாசம் தாண்டியதால் மருத்துவக் குழுவினர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, கருவில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் இருப்பது மருத்துவ அறிக்கைகள் மூலம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். குழந்தை பிறந்த பிறகு அதன் வாழ்க்கைத் தரம், சுயமாக வாழ்வதற்கான வாய்ப்புகள் மற்றும் அந்தப் பிஞ்சு உயிர் எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் சொல்லொணாத் துயரங்களைக் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம் என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், கருவில் உள்ள குழந்தையின் இத்தகைய தீவிர உடல்நலப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, அந்தக் குழந்தையைப் பெற்றெடுப்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் முழு உரிமை தாய்க்கு மட்டுமே உள்ளது என்றும் நீதிபதி திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் 32 வாரக் கர்ப்பத்தை உடனடியாகக் கலைப்பதற்கான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழகச் சுகாதாரத் துறைச் செயலாளருக்கு நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
