CRIME
“அடச்சீ…. இவனெல்லாம் ஒரு மனுசனா…?” தம்பதியரைக் கொன்று சடலத்திடம் அத்துமீறிய சைக்கோ கொலையாளி.. 10 நாட்களுக்குப் பிறகு வனப்பகுதியில் நடந்த திகில் வேட்டை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில், திருடச் சென்ற வீட்டில் தம்பதியரைக் கொடூரமாகக் கொலை செய்து, உயிரிழந்த பெண்ணின் சடலத்திடம் அத்துமீறிய கொடூர குற்றவாளியைப் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்துள்ளனர். கடந்த நவம்பர் 4-ஆம் தேதி இரவு, குர்சஹாய்கஞ்ச் பகுதியில் உள்ள சஞ்சீவ் என்பவரது வீட்டிற்குள் யோகேஷ் ராஜ்புத் என்ற நபர் திருடும் நோக்கில் நுழைந்துள்ளார்; அப்போது சத்தம் கேட்டு சஞ்சீவ் மற்றும் அவரது மனைவி விழித்துக்கொண்டதால், மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் இருவரையும் கம்பால் தாக்கிக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இத்துடன் நிற்காமல், உயிரிழந்த பெண்ணின் உடலிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்தக் கொடூரன், அங்கிருந்த சின்னஞ்சிறு குழந்தையையும் தூக்கி வீசிப் பலத்த காயப்படுத்திவிட்டுத் தப்பியோடியுள்ளான்.
இந்த நெஞ்சை உலுக்கும் இரட்டைக் கொலை வழக்கு குறித்துத் தனிப்படை அமைத்து விசாரித்த காவல்துறையினர், சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியுடன் குற்றவாளி யோகேஷ் ராஜ்புத்தை அடையாளம் கண்டனர். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமையன்று கசாரி வனப்பகுதியில் பதுங்கியிருந்த அவனைப் போலீசார் சுற்றி வளைத்தபோது, போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்பிக்க முயன்றுள்ளான். உடனே தற்காப்புக்காகப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவனது இரண்டு கால்களிலும் குண்டு பாய்ந்த நிலையில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்; தொடர்ந்து அவனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
