LATEST NEWS
“ரூ.400 கோடி நிதி இல்லையா..?” அமைச்சர் ரமேஷுக்கு முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கொடுத்த அதிரடி பதிலடி.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எஸ். ரமேஷுக்கும், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பி. கே. சேகர்பாபுவுக்கும் இடையே கோயில் நிதி மேலாண்மை தொடர்பாகக் கடுமையான அரசியல் விவாதம் வெடித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களால் தற்போதைய அரசுக்கு ரூ.400 கோடி நிலுவைத்தொகை உள்ளதாக அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, “ரூ.400 கோடி நிதி இல்லை” எனக் கைவிரிப்பது கண்ணாடி மாளிகையில் இருந்துகொண்டு கற்கோட்டையை நோக்கி கல் எறிவதைப் போன்றது என்று காரசாரமாக விமர்சித்துள்ளார்.
மேலும் தனது எக்ஸ் தளப் பதிவில், கடந்த திராவிட மாடல் ஆட்சியில் முறையான நிதி மேலாண்மை பின்பற்றப்பட்டதால் தான் 4,649 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகச் சேகர்பாபு குறிப்பிட்டுள்ளார். மேலும், 1,000 ஆண்டுகள் பழமையான 352 திருக்கோயில்கள் ரூ.560 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு, 96 கோயில்களுக்குக் குடமுழுக்கும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளைக் காரணம்காட்டாமல் அவற்றைச் சரிசெய்து, கோயில்களுக்கு வரும் இறையன்பர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே தற்போதைய அமைச்சரின் முதன்மையான கடமை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
