CRIME
“ராணுவ ரகசியங்கள் லீக்..?” அழகான பெண்ணின் வாட்ஸ்அப் சாட்டிங்கிற்கு மயங்கிய அதிகாரி… நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்தாக முடிந்த விபரீதம்..!!
வேலூர் மாவட்டத்தில், இந்திய ராணுவத்தின் ரகசியத் தகவல்களைச் சேகரித்து வெளிநாட்டினருக்கு வழங்கியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவரிடம் மத்திய உளவுத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் கீழ்வல்லம் பகுதியைச் சேர்ந்த 52 வயதான பாபு என்பவர், ராணுவத்தில் 28 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார். அவர் ராணுவத்தின் தளவாடப் பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றியதால், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கியத் தகவல்களைச் சேகரித்து வெளியாட்களுக்குப் பகிர்ந்து வருகிறாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மத்திய உளவுத்துறையினர் அவரைக் கண்காணித்து வந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையின்படி, சுமார் ஓராண்டுக்கு முன்பு வாட்ஸ்அப் மூலம் அறிமுகமான ஒரு பெண், ‘ஹனிடிராப்’ முறையில் பாபுவிடம் நெருக்கமாகப் பழகியுள்ளார். தான் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் பணியாற்றுவதாகக் கூறிக்கொண்ட அந்தப் பெண், ராணுவத் தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான விபரங்களைக் கேட்டுள்ளார். அதனை நம்பிய பாபு, தன்னிடம் இருந்த விபரங்களைப் பகிர்ந்ததோடு, தற்போது ராணுவத்தில் பணியாற்றி வரும் தனது முன்னாள் சக ஊழியர்களிடம் விசாரித்தும் கூடுதல் ரகசியத் தகவல்களைச் சேகரித்து அந்தப் பெண்ணிற்கு அனுப்பியதாக விசாரணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, கீழ்வல்லம் பகுதியில் உள்ள பாபுவின் வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள், அவரை வேலூர் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இரண்டு நாட்களாக தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், மேல் விசாரணைக்காக அவர் உளவுத்துறை தொடர்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய இந்த விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், குற்றச்சாட்டுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இச்சம்பவம் வேலூர் பகுதி மக்களிடையேயும் காவல்துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
