LATEST NEWS
இவனுக்கெல்லாம் எவ்வளவு தைரியம்..? காவல் நிலைய கண்ணாடியை உடைத்து… பெண் காவலர்களை ஆபாசமாக திட்டி… பாலியல் புகாரில் சிக்கிய வாலிபர் செய்த செயலால் பரபரப்பு..!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூர் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியூரில் தங்கி வேலை செய்து வரும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த தர்ஷன் (28) என்ற கூலித் தொழிலாளி இப்பெண்ணை நீண்ட நாட்களாக நோட்டமிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி, குழந்தைகள் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்ததால் அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தர்ஷன், நள்ளிரவில் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தர்ஷனைப் பிடித்துக் கண்டித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தர்ஷனைப் பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது கடுமையான மது போதையில் இருந்த தர்ஷன், காவல் நிலையத்தின் கதவு கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டதோடு, அங்கிருந்த பெண் காவலர்களை ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
காவல் நிலையத்திற்குள் தர்ஷன் அத்துமீறி அட்டூழியம் செய்ததைத் தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல் துறையினர் குடியாத்தம் நகர காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த நகர போலீசார் தர்ஷனை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் புகாரில் சிக்கிய வாலிபர் காவல் நிலையத்திலேயே புகுந்து கண்ணாடியை உடைத்து மிரட்டல் விடுத்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
