LATEST NEWS
“தயவு செஞ்சி என் மனைவியை விட்டுடுங்க” தவெக புள்ளியிடம் கதறும் அன்பில் மகேஷ்..? 100 கோடி ஊழல் விவகாரத்தில் வெளியான தகவல்..!!!
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறையில் அரங்கேறிய ₹100 கோடி மெகா ஊழல் விவகாரம், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சுற்றி பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள சிபிஎஸ்இ மற்றும் தனியார் பள்ளிகளுக்குக் கல்வித் தர உயர்த்தல் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடிக்கு மேல் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக திமுகவைச் சேர்ந்த பி.டி. அரசகுமார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்ததும் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவர் மீது தற்போது குண்டர் சட்டமும் பாயப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பி.டி. அரசகுமாரிடம் மத்திய குற்றவியல் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், தனியார் பள்ளிகளிடம் வசூலித்த பெருந்தொகையைத் தான் நேரடியாக அன்பில் மகேஷ் மற்றும் அவரது மனைவியிடம் ஒப்படைத்ததாக அவர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அன்பில் மகேஷ் மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவருக்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மத்திய குற்றவியல் போலீசார் அன்பில் மகேஷுக்குச் சம்மன் அனுப்பி, இந்த ஊழல் தொடர்பாக நேரடி விசாரணையையும் நடத்தியுள்ளனர். அதே வேளையில், அன்பில் மகேஷிற்கு நெருக்கமான வாளாடி கார்த்திக் என்பவரும் இந்த விவகாரத்தில் சிக்கி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும், அன்பில் மகேஷின் உதவியாளரும் விசாரணை அதிகாரிகளின் முன் ஆஜராகி, தன் தரப்பு விளக்கங்களையும் அளித்துள்ளார்.
இவ்வாறு அன்பில் மகேஷின் நெருங்கிய வட்டாரங்களைச் சேர்ந்த ஒவ்வொருவராக விசாரணைக்கு அழைக்கப்பட்டு, வலைப்பின்னல் தீவிரமாகப் பின்னப்பட்டு வருகிறது. குறிப்பாக, வசூலிக்கப்பட்ட பணம் அன்பில் மகேஷின் மனைவியிடம் கொடுக்கப்பட்டதாக வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால், அடுத்து அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதனால் தன் மனைவியை இந்த சட்டரீதியான நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்ற அன்பில் மகேஷ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தன் மனைவியைக் காப்பதற்காகத் தவெக தலைமையின் முக்கியப் புள்ளி ஒருவரை அன்பில் மகேஷ் ரகசியமாகத் தொடர்புகொண்டு பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. “இந்த விவகாரத்தில் தன் மீது என்ன வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள்; அதற்கு முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், தயவுசெய்து என் மனைவியை இதில் உள்ளே இழுக்க வேண்டாம்” என்று அவர் அந்த முக்கிய புள்ளியிடம் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.
அன்பில் மகேஷின் கோரிக்கையைக் கேட்ட அந்த தவெக நிர்வாகி, “உங்கள் சூழலை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது; இந்த வழக்கில் உங்கள் மனைவி மீது நடவடிக்கைகள் பாயாதவாறு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்கிறோம்” என ஆறுதல் கூறியதாகத் தெரிகிறது. இதன் மூலம், கடந்த ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறையில் நடந்த இந்த ₹100 கோடி ஊழல் வழக்கிலிருந்து அன்பில் மகேஷின் மனைவி தப்புவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகக் கோட்டை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
