LATEST NEWS
திக் திக்..! புயலில் மூழ்கிய படகு… மரண பயத்தில் அலறிய டீன்-ஏஜ் இளைஞர்கள்… தைரியமாக இறங்கி மீட்ட 3 சிறுவர்கள்.. குவியும் பாராட்டுக்கள்..!!
அமெரிக்காவின் டென்னசி பகுதியில் உள்ள பூன் ஏரியில், பாறையில் மோதி மூழ்கிக்கொண்டிருந்த படகில் இருந்து 4 டீன்-ஏஜ் இளைஞர்களை 10, 12 மற்றும் 13 வயதுடைய மூன்று சிறுவர்கள் சாதுரியமாக மீட்டு சாதனை படைத்துள்ளனர். விடுமுறைக்காகத் தாத்தா-பாட்டி வீட்டிற்கு வந்திருந்த டெக்லான் ஜாக்சன், கோர்மக் ஜாக்சன் மற்றும் எல்சா ஜாக்சன் ஆகிய இந்த உடன்பிறப்புகள், ஏரியிலிருந்து கேட்ட அலறல் சத்தத்தைக் கேட்டு உடனடியாகத் தங்களின் சிறிய மீன்பிடிப் படகுடன் மீட்புப் பணியில் இறங்கினர்.
அபாயகரமான பகுதியில் இளைஞர்களின் படகுக்குள் தண்ணீர் புகுந்து, பேட்டரி வரை ஏறியதால் மின்சாரம் பாயும் அச்சத்தில் அவர்கள் உறைந்து போயிருந்தனர். அப்போது 12 வயது சிறுவன் கோர்மக் தனது படகில் ஒரே நேரத்தில் அனைவரும் ஏறினால் கவிழ்ந்துவிடும் என்பதை உணர்ந்து, ஒரு நேரத்தில் ஒருவரை மட்டுமே ஏற்ற முடியும் என்று சாதுரியமாகத் தடுத்தான். தான் அண்மையில் ஸ்கவுட் (சாரணர்) இயக்கத்தில் பெற்ற உயிர் காக்கும் பயிற்சித் திறன்களைப் பயன்படுத்தி, மரண பயத்தில் இருந்த இளைஞர்களுக்குத் தைரியம் அளித்து அவர்களைக் கரை சேர்த்தான்.
இச்சம்பவத்தின்போது கிராமப்புற பகுதி என்பதால் அவசரக்கால மீட்புக் குழுவினர் வர அரை மணி நேரம் தாமதமானது. எனினும், சிறுவர்கள் பாதுகாப்பாக அனைவரையும் மீட்ட சில நிமிடங்களிலேயே அந்தப் பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கொடூரமான புயல் தாக்கத் தொடங்கியது. சரியான நேரத்தில் செயல்பட்டு 4 உயிர்களைக் காப்பாற்றிய இந்தச் சிறுவர்களின் வீர தீரச் செயலைப் பாராட்டி, அவர்களின் தாய் லாரா ஜாக்சன் நெகிழ்ச்சியுடன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
