LATEST NEWS
“தீபாவளி ஒரு வியாதி…” காங்கிரஸ் எம்.பி.யின் சர்ச்சைப் பேச்சால் வெடித்த புதிய அரசியல் சர்ச்சை..! பாஜக கடும் கண்டனம்..!!
புதிய டெல்லி: தீபாவளி பண்டிகை மனிதர்களால் உருவாக்கப்பட்ட நோய் என காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூர் மக்களவை தொகுதிக்கான காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கூறும்போது, தீபாவளியும், காற்று மாசுபாடும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட நோய்கள் என்று குறிப்பிட்டார். மேலும் இந்த சிக்கலை அரசால் மட்டுமே எதிர்கொள்ள முடியாது என்றும், பொதுமக்களிடையே பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பல்வேறு கட்சிகளிடமிருந்து எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது.
இதற்குப் பதிலளித்துப் பேசியுள்ள பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி, காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக சனாதன தர்ம அவமதிப்பில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதற்காக காங்கிரஸ் கட்சி கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்த அவர், தீபாவளி பண்டிகை ஒரு வியாதி அல்ல, அது மகிழ்ச்சிக்கான பண்டிகை என்றும், காங்கிரஸ் கட்சி அவரை பதவி நீக்கம் செய்யும் என நம்புவதாகவும் தெரிவித்தார். சமீபத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தீபாவளி பண்டிகையை ஈத் பண்டிகையுடன் ஒப்பிட்டுப் பேசியதும், அதை மக்கள் அனைவரும் கொண்டாடும் மகிழ்ச்சியான மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் பண்டிகையாக வர்ணித்ததும் குறிப்பிடத்தக்கது.
எனினும், கார்கேவின் அந்தக் கருத்துக்கும் பா.ஜ.க. தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, தீபாவளி பண்டிகையின்போது கூட காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியலை பற்றியே சிந்திப்பதாகக் விமர்சித்ததுடன், காங்கிரஸ் கட்சி சனாதன தர்மத்துக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டினார். மேலும், பா.ஜ.க. எம்.பி. சுதான்ஷு திரிவேதி பேசுகையில், காங்கிரஸ் கட்சி பாபர் மீது தொடர்ந்து அனுதாபம் கொண்டிருப்பதாக விமர்சனம் வெளியிட்டார். இந்த விவகாரங்கள் தேசிய அரசியலில் தொடர்ந்து விவாதப் பொருளாக மாறி வருகின்றன.
