CRIME
ஒரே குடும்பத்தில் நேர்ந்த சோகம்… இரண்டு அண்ணன் மகன்களைக் கொன்றுவிட்டு சித்தப்பாவும் தற்கொலை..? நடந்தது என்ன..? திடுக்கிடும் சம்பவம்..!!
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில் உள்ள கஞ்சன்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சிக்ரௌதா கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் விஷ்ணு (22) மற்றும் அவரது அண்ணன் மகன்களான சன்னி (10), மானவ் (8) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் விஷ்ணுவின் சடலம் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையிலும், சிறுவர்கள் இருவரின் சடலங்கள் அருகிலுள்ள விவசாய நிலத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை மாலை விஷ்ணு தனது தாய் மற்றும் இரு சிறுவர்களுடன் பைக்கில் ஆகுபுராவில் உள்ள தனது சகோதரி வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவரது தாய் தங்கிவிட, விஷ்ணு இரு சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு அன்றிரவு சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். ஆனால், புதன்கிழமை காலை வரை அவர்கள் வீடு திரும்பாத நிலையில், சிக்ரௌதா கிராமத்திற்கு அருகே உள்ள வயல்வெளியில் அவர்கள் பயணித்த பைக்குடன் மூவரும் சடலங்களாகக் கண்டறியப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், சித்தப்பா விஷ்ணு தனது இரண்டு அண்ணன் மகன்களையும் கொலை செய்துவிட்டு, பின்னர் அவரும் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கஞ்சன்பூர் போலீசார் மற்றும் தடயவியல் (FSL) நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆதாரங்களைச் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூராய்வு மற்றும் முழுமையான விசாரணைக்கு பிறகே இக்கோர மரணங்களுக்கான உண்மையான காரணம் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
