LATEST NEWS
அதிசயமா? அறிவியலா? கறுப்பு எருமைக்கு பிறந்த வெள்ளை கன்றுக்குட்டி… • அறிவியல் சொல்வது என்ன.? நெட்டிசன்களை வியக்க வைத்த இயற்கையின் அதிசயம்..!!
கர்நாடக மாநிலம் யத்கிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கறுப்பு நிற எருமை ஒன்று வெள்ளை நிறக் கன்றுக் குட்டியைப் பெற்றெடுத்துள்ள விசித்திரமான சம்பவம் பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள நாராயணபூர் கிராமத்தைச் சேர்ந்த பரசுராம் என்ற விவசாயிக்குச் சொந்தமான எருமை, 10 மாதக் கர்ப்பக் காலத்திற்குப் பிறகு இந்த வெள்ளை நிற ஆண் கன்றுக் குட்டியை ஈன்றுள்ளது. வழக்கத்திற்கு மாறான நிறத்தில் பிறந்த இந்த கன்றுக் குட்டியைப் பார்ப்பதற்காக, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் விவசாயியின் வீட்டிற்குத் திரண்டு வருகின்றனர்.
கறுப்பு நிற எருமைக்கு வெள்ளை நிறத்தில் கன்று பிறந்துள்ளதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணங்களை வல்லுநர்கள் விளக்குகின்றனர். இதன்படி, பெற்றோரிடம் இருந்து குட்டிக்குக் கடத்தப்படும் மரபணுக்களில் ஏற்படும் அரிதான மாற்றங்கள் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம். எருமை கறுப்பாக இருந்தாலும், அதன் மரபணுக்களில் மறைந்திருக்கும் நிறம் சார்ந்த வேறுபட்ட பண்புகள் வெளிப்படும் போது, பிறக்கும் குட்டியின் நிறம் மாறுபட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
மற்றொரு காரணமாக, தோலுக்கும் முடிகளுக்கும் நிறமளிக்கும் ‘மெலனின்’ (Melanin) என்ற பிக்மெண்ட் குறைபாடு அல்லது மரபணு மாற்றங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. இந்த கன்றுக் குட்டி ‘அல்பினிசம்’ (Albinism) போன்ற ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மரபணு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைப் கால்நடை மருத்துவர்களின் முறையான பரிசோதனைக்கு பிறகே உறுதி செய்ய முடியும். தற்போதைய நிலையில், இந்த வெள்ளை நிறக் கன்றுக் குட்டி முற்றிலும் ஆரோக்கியமாக உள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
