LATEST NEWS
“அம்மா என்னை அடிச்சே கொன்னுடுவாங்க…” விபத்தில் ஸ்கூட்டர் உடைந்ததால் நடுரோட்டில் கைகூப்பி அழுத சிறுவன்… இணையத்தில் எழுந்த விவாதம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் பகுதியில் சிறுவன் ஒருவன் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் விபத்துக்குள்ளானதும், “எங்கள் அம்மா என்னை அடித்துக் கொன்று விடுவார்” என்று பயந்து அழுது புலம்பும் உருக்கமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தச் சிறுவன் வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வீதிக்கு வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வாகனத்தின் ஆக்சிலரேட்டர் (Accelerator) சிக்கிக்கொண்டதால், அவனால் ஸ்கூட்டரைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டு வாகனம் சேதமடைந்துள்ளது.
விபத்து நடந்தவுடன் பயந்துபோன அந்தச் சிறுவன், சாலையோரம் அமர்ந்து கைகளைக் கூப்பி, அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் அழுதுகொண்டே உதவி கேட்டுள்ளார். “தயவுசெய்து எனது வண்டியைச் சரிசெய்து கொடுங்கள், இல்லை என்றால் என் அம்மா என்னை உயிரோடு விடமாட்டார், பயங்கரமாக அடிப்பார்” என்று அவன் கதறியுள்ளார். அவனது நிலையைப் பார்த்த அங்கிருந்த மக்கள், சிறுவனைத் தேற்றி சமாதானப்படுத்த முயன்றதோடு, அவனது அச்சத்தைப் போக்கப் பேசினர்.
இச்சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்ய, அது இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போதிய வயதும் உரிமமும் இல்லாத சிறுவர்களிடம் இருசக்கர வாகனங்களை வழங்குவது அவர்களது உயிருக்கோ அல்லது சாலையில் செல்வோர் உயிருக்கோ ஆபத்தாக முடியும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது. இந்த வைரல் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு, முராதாபாத் காவல்துறையினர் வழக்கைச் சட்டப்பூர்வமாகக் கவனத்தில் எடுத்துக்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
