LATEST NEWS
பெரும் பயங்கரம்..! திடீரென வெடித்த பவர்பேங்க்… நொடிப் பொழுதில் சாம்பலான பிரபல யூடியூபரின் கனவு இல்லம்..!!!
குஜராத் மாநிலம் சூரத்தின் ஜஹாங்கீர்புரா பகுதியில் வசித்து வரும் பிரபல உள்ளடக்கப் படைப்பாளரும் ‘லிட்டில் க்ளோவ்ஸ்’ என்ற சேனலின் யூடியூபருமான ஷிவானி கபிலாவின் வீட்டில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. படுக்கையறையில் சார்ஜ் போட்டுக் வைக்கப்பட்டிருந்த வயர்லெஸ் பவர்பேங்க் ஒன்று எதிர்பாராதவிதமாக பயங்கரமாக வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணமாகும். பவர்பேங்க் வெடித்தவுடன் பற்றிய தீ, கண் இமைக்கும் நேரத்திற்குள் அறை முழுவதும் பரவி வீடு முழுக்க எரிந்து சாம்பலாகியது. இந்த விபத்து நடந்த சமயத்தில் ஷிவானி தனது மாமியாருடன் மருத்துவமனைக்குச் சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
தீ விபத்து ஏற்பட்ட போது வீட்டில் ஷிவானியின் தந்தை மட்டுமே இருந்துள்ளார். தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால், அறையிலிருந்த ஏர் கண்டிஷனர் வெப்பம் தாங்காமல் உருகியது. மேலும், ஷிவானியின் விலையுயர்ந்த ஆடைகள், பைகள், நகைகள், பீரோ மற்றும் அவரது மகள் ஆத்யாவின் சிறுவயது நினைவாகச் சேர்த்து வைத்திருந்த பொருட்கள் என அனைத்தும் தீயில் கருகின. இவற்றுடன் சேர்த்து, யூடியூப் நிறுவனத்திடமிருந்து கடின உழைப்பால் அவர் பெற்றிருந்த மதிப்புமிக்க டைமண்ட், கோல்ட் மற்றும் சில்வர் பிளே பட்டன்களும் முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட்டன.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ள ஷிவானி கபிலா, ஒரு நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்து தனது பல ஆண்டுகால உழைப்பு மற்றும் சேமிப்பின் மூலம் ஆசை ஆசையாகக் கட்டிய கனவு இல்லம், ஒரே ஒரு பவர்பேங்க் வெடித்ததால் ஒட்டுமொத்தமாகத் தன் கண் முன்னாலேயே சாம்பலாகிவிட்டதாகக் கதறியுள்ளார். மேலும், தீ விபத்திற்குப் பிறகு வீட்டின் அறைகளில் பரவிய நச்சுத்தன்மை வாய்ந்த கார்பன் மோனாக்சைடு புகையைச் சுவாசித்ததால் ஷிவானி, அவரது தந்தை மற்றும் மேலாளர் ஆகியோருக்கு வாந்தியும் வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த அதிர்ச்சியிலிருந்து அவரது குடும்பத்தினர் மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.
