LATEST NEWS
சிறுமிக்கு நடந்த கொடூரம்… குற்றவாளிக்கு மரண தண்டனை… அதிரடி தீர்ப்பு வழங்கிய புனே சிறப்பு விரைவு நீதிமன்றம்…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 3 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடூரக் குற்றத்திற்கான வழக்கில், 65 வயது முதியவருக்கு சிறப்பு விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை மற்றும் இறுதித் தீர்ப்பு அனைத்தும் குற்றம் நடந்த 60 நாட்களுக்குள் மிக அதிவேகமாக முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே 1-ஆம் தேதி நஸ்ராபூர் கிராமத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட பீம்ராவ் காம்ப்ளே என்ற நபர் அச்சிறுமியைக் கடத்திச் சென்று கொலை செய்துள்ளார். சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் உடனடியாகக் குற்றவாளியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்ற விசாரணையின் போது, சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது. எதிர்த்தரப்பில் வயது மூப்பைக் காரணம்காட்டி ஆயுள் தண்டனை கோரப்பட்ட போதிலும், குற்றத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு அரசுத் தரப்பு மரண தண்டனையைக் கோரியது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் என்பதைக் குறிப்பிட்டு, இதனை ஒரு அபூர்வமான வழக்காகக் கருதி மரண தண்டனையை உறுதி செய்தார்.
