LATEST NEWS
“இதற்கு எதற்கு விஜய்? எடப்பாடியாரே முதலமைச்சராக இருந்திருக்கலாம்” தவெக அரசை கடுமையாக விமர்சித்த ஆர்.பி. உதயகுமார்..!!
மாற்றத்தை தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, மக்களுக்கு முன்னேற்றத்தைத் தரவில்லை என்றாலும் பரவாயில்லை; ஏமாற்றத்தையாவது தராமல் ஆட்சி நடத்துமா என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், சட்டமன்றத்தில் பல்வேறு துறை சார்ந்த கேள்விகளுக்கு அதற்குச் சம்பந்தமில்லாத அமைச்சர்கள் பதிலளிப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
குறிப்பாக, நெல் சேமிப்பு கிடங்கு குறித்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷும், கரும்பு சாகுபடி குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், நெல் மானியம் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையனும் பேசுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடன் நிலைமை குறித்து மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜும், பட்ஜெட் தொடர்பான புள்ளிவிவரங்களை நிதி அமைச்சர் மரிய வில்சனும் தடுமாறிப் பேசுவதாக அவர் சாடியுள்ளார்.
சட்டமன்றத்தில் கேட்கப்படும் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் முதலமைச்சர் விஜய் அமைதியாக இருப்பதாகவும், ஸ்கிரிப்ட் இல்லாமல் பேசுவதில் அவருக்குச் சிரமம் இருப்பதாகவும் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். அத்துடன், சட்டமன்றத்தைப் பொறுத்தவரை வெறும் பேச்சை விட செயல்பாடே முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள திட்டங்கள் அனைத்தும் முந்தைய அதிமுக ஆட்சியின் திட்டங்களாகவே இருக்கின்றன என்று கூறிய அவர், “இதற்கு எதற்கு விஜய்? எடப்பாடியாரே முதலமைச்சராக இருக்கலாமே” என மக்கள் நினைப்பதாகத் தெரிவித்தார். புதிய ஆட்சியை நடத்தி வரும் தவெக அரசு ஏமாற்றத்தைத் தராமல் செயல்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
