CRIME
“வாகனத்தில் இருந்து கீழே இறங்குங்கள்..” என்று சொன்னது தப்பா..? 3 பேரை குடலிறங்கக் குத்திய கும்பல்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி ..!!
கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டம் கங்காவதி தாலுகாவில் உள்ள அரலா கிராமத்தில், கணேஷ் விசர்ஜன ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் ஜெயபிரகாஷ், குருபிரகாஷ் மற்றும் தொட்டபசவா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் தொட்டபசவா கங்காவதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வயிற்றில் பலத்த கத்திக் குத்து காயமடைந்த ஜெயபிரகாஷ் மற்றும் குருபிரகாஷ் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக கொப்பள் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கணேஷ் விசர்ஜன ஊர்வலத்தின் போது டிஜே சவுண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்ட வாகனத்தின் மீது ஏறி சில இளைஞர்கள் நடனமாடியுள்ளனர். அப்போது பாதுகாப்பு காரணங்களைக் கருதி ஜெயபிரகாஷ் மற்றும் அவரது தரப்பினர் அந்த இளைஞர்களை வாகனத்திலிருந்து இறங்குமாறு கூறியதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை மனதில் வைத்து பழிவாங்கத் துடித்த அந்த இளைஞர்கள், திங்கட்கிழமை மீண்டும் ஜெயபிரகாஷ் குழுவினரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு, திடீரென தங்களது கத்தியால் மூன்று பேரையும் கொடூரமாகக் குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து கங்காவதி ஊரக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
